தேர்தல் யுத்தி


பொதுவாக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர வேண்டும் என பல்வேறு யுத்திகளை கையாளுவது சமீப காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் குறிப்பாக இவர்களின் புதிய யுத்திகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் வைரல் ஆவதால் அது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து, வழக்கத்திற்கு மாறான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டீ கடையில் டீ போடுவது, வடை, போண்டா,பஜ்ஜி, பரோட்டா போடுவது, காய்கறி விற்பனை செய்வது, துணி துவைத்து தருவது என புது புது விதமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். 




நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.




தொகுதி விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15 லட்சத்து 45 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர்.




பா.ம.க. வேட்பாளர்


தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரம் மற்றும் மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலை பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் காணப்பட்டது. மேலும் பல பகுதிகளில் மின்சார கம்பிகளில் மரங்களின் கிளைகள் சுற்றிகொண்டும் இருந்துள்ளது.




மின்கம்பம் பிரச்சினை 


இதனை அப்பகுதி வழியாக பிரச்சாரத்திற்கு சென்ற போது கண்ட பா.ம.க. வேட்பாளர் மயிலாடுதுறை அருகே மூவலூரில் உள்ள உதவி மின்சார அலுவலகத்திற்கு தனது கூட்டணி கட்சியினரோடு நேரடியாக சென்று மிகவும் ஆபத்தான நிலையில், உள்ள மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை உடனடியாக சீர்படுத்த வேண்டும், இல்லையேல் இரண்டு நாட்களில் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் எச்சரிக்கை விடுத்துச்சென்றார். 





முன்னதாக மக்களுக்கான போராட்டங்கள் பலவற்றை தொடர்ந்து ஈடபட்டு வரும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் போது மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.