மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நேற்று அதிகாலை மீண்டும் அந்த பகுதியில் சுற்றிய சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றிகளை கடித்து குதறியது. இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 


இந்தநிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் இருக்க கூறை நாடு பகுதிகளில் சிறுத்தை உலா வரும் நிலையில், 7 பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிறுத்தை தேடும் பணி தீவிரம்: 


மயிலாடுதுறையில் சிறுத்தை  பதுங்கி உள்ள பகுதி கண்டுபிடிப்பு, தூக்கணாங்குளம் எரகலி தெரு காட்டுப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுத்தையை வனத்துறையினர்  தேடி  வருகின்றனர். 


மயிலாடுதுறை நகரில் கடந்த 2ம்தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை தேடி வந்தனர்.  


இந்நிலையில்  தூக்கணாங்குளம் எரகலி தெருவில் சிறுத்தை பதுங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர்.  மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை  கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் இருந்த சிறுத்தை புலி தற்போது 3 கி.மீ நகர்ந்து சென்று ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு சென்று பதுங்கி உள்ளது. சிறுத்தை தூக்கணாங்குளம் பகுதியில் பதுங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.


மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வைத்து பிடிப்பதற்கு  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலிருந்து 5 வனத்துறை அலுவலர்கள் வந்துள்ளனர்.மேலும் வால்பாறையிலிருந்து மேலும் 5 வனத்துறை அலுவலர்கள் வருகின்றனர். விரைவில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூறைநாடு பகுதியில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடக்கும் மூன்று பள்ளிகளுக்கு மட்டும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினருடன் பாதுகாப்பு வழங்கப்பட்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.