இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம்


இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி கூட்டணி கட்சியினர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இறுதியாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.




முதலமைச்சரின் அலை:


அப்போது அவர் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சரின் அலைதான் வீசுகிறது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செல்கின்ற இடம் எல்லாம் மக்களிடம் பேராதரவு இருக்கிறது, ஏன் ஏப்ரல் 19 -ஆம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாக்கு பெட்டியை இன்றே வையுங்கள் வாக்கு செலுத்துகின்றோம் என்ற அளவிற்கு மக்களிடம் எங்களுக்கு ஆதரவு இருந்து வருகிறது.


இதனால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மேலும் ரமலான் பண்டிகை மற்றும் பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு, பொதுத் தேர்வுகள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 12 -ம் தேதி அன்று பிறை தென்பட்டு, ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது என்றார்.




தமிழக முதலமைச்சர் என்ற எண்ணத்தில் தான் 40 தொகுதிகளும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்


திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுத்த வரை திமுக சார்பில் மதிமுகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்களும் இரண்டு மூன்று சின்னங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.


அவர்களும் வழக்குகள் எல்லாம் போட்டு அந்த வழக்குகளை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்காத நிலை இருக்கிறது என்று சொல்லும்போது, அது இல்லாமல் இரண்டு சின்னங்கள் அவர் கேட்டதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த சின்னம் வரும்போது கண்டிப்பாக அந்த சின்னம் எந்த சின்னமாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவதற்கு வெற்றி பெற செய்வதற்கு கண்டிப்பாக எங்களுடைய தோழமைக் கட்சிகள் சார்ந்த அனைவரும் உழைக்க தயாராக இருக்கிறோம்.


எங்களை பொறுத்தவரையிலும் நிற்கின்ற வேட்பாளர் தமிழக முதலமைச்சர் என்ற எண்ணத்தில் தான் 40 தொகுதிகளும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த விதத்தில் திருச்சி நாடாளுமன்றம் என்று வரும்போது கண்டிப்பாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக்கொள்கிறேன்.




சுயேட்சை சின்னத்தில் நிற்பதை விட உதய சூரியன் சின்னத்தில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு? கண்டிப்பாக நாங்க அந்த கோரிக்கையை தான் முன் வைத்தோம், வெற்றி என்பது நமக்கான வெற்றியாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும்போது அவர்கள் அவருடைய இயக்கத்தை சார்ந்து இருக்கின்ற தலைவர்களை கலந்து ஆலோசித்து விட்டு இந்த கருத்துக்களையும் உங்களிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக எங்களை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்படைத்து இருக்கின்ற அந்த வேட்பாளருக்கு எந்த சின்னம் வந்தாலும், அந்த சின்னத்திலேயே அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலை உருவாக்கி தருவோம் என்றார்.




அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்


சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் என்று அண்ணாமலை கூறி வருவது குறித்த கேள்விக்கு? அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார், அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் இருந்ததாகவும் அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த தேவையில்லை என்று கருதுகிறேன்.


எங்களை பொறுத்தவரையில் எங்களுடைய வேட்பாளருக்கு உழைக்க தான் நாங்கள் கண்ணும் கருத்துமாக பார்க்கின்றமே தவிர, எதிர்த்து நிற்கிறவர்கள் யாராக இருந்தாலும் சரி எதிரியினை சார்ந்து இருக்கின்ற தலைவர்கள் என்ன கருத்து சொல்கின்றார்கள் எனபது தேவையில்லாத ஒன்று என்றார். இந்நிகழ்வில் அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், அரசு கொறடா கோவி. செழியன் காங்கிரஸ் வேட்பாளர் சுதா, எம் பி, எம் எல் ஏக்கள் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.