மயிலாடுதுறை: சவுதி அரேபிய கடற்பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சங்கர் (39) இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Continues below advertisement

ஏற்கனவே இச்சம்பவத்தில் மற்றொரு மீனவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது மயிலாடுதுறை மீனவர் கிராமங்களில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலில் நடந்த கோரத் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகரைச் சேர்ந்த மாவீரன் (40), கீழமூவர் கரையைச் சேர்ந்த சங்கர் (39), திருமுல்லைவாசலைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு மீனவர்களும் வாழ்வாதாரத்திற்காக சவுதி அரேபியாவிற்குச் சென்று அங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

Continues below advertisement

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு இவர்கள் வழக்கம்போல சவுதி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு விசைப்படகில் வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள், தமிழ்நாட்டு மீனவர்களின் படகிற்குள் அத்துமீறி நுழைய முயன்று கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்பு

கொள்ளையர்களின் அத்துமீறலை மீனவர்கள் தீவிரமாக எதிர்த்ததால், ஆத்திரமடைந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் தங்கள் வசம் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். இந்த கொடூரத் தாக்குதலில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடலில் பலத்த காயமடைந்த சங்கர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். லேசான காயமடைந்த பால்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தங்களது இருப்பிடத்திற்குத் திரும்பினர்.

சிகிச்சை பலனின்றி சங்கர் மரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் சவுதியில் உள்ள அதிகாரிகளால் மயிலாடுதுறையில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த சங்கருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினரைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

மீனவ கிராமங்களில் தொடரும் சோகம்

முன்பு மாவீரன் உயிரிழந்த துயரமே இன்னும் ஆறாத நிலையில், தற்போது சங்கரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி பரவியதால், தொடுவாய் மற்றும் கீழமூவர்கரை ஆகிய மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சக மீனவர்கள் கதறி அழுது தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அரசுகளுக்குக் குடும்பத்தினர் கோரிக்கை

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாவீரன் மற்றும் சங்கர் ஆகிய இருவரின் உடல்களையும் தாய்நாட்டிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், மயிலாடுதுறை மாவட்ட மீனவ அமைப்புகளும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளையும், வாழ்வாதார உதவியையும் அரசு வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.