குத்தாலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தங்கள் சிகிச்சைக்கும் வாழ்வதாரத்தை காக்கவும் அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்
ஒரே குடும்பத்தில் ஐந்து மாற்று திறனாளிகள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வயதான சம்பந்தம் மற்றும் பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 45 ஆண்டு காலம் ஆகிறது. இந்நிலையில் ஒரு மகள் மற்றும் ஐந்து மகன்களுடன் குறுகலான ஓட்டு வீட்டில் ஒரு கூட்டு கிளிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ஒரு மகள் மற்றும் நான்கு மகன்கள் உடலில் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஆவர்.
கொரோனா காலத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி
மூத்த மகள் செல்வி குடும்ப வறுமையின் காரணமாக கடந்த கொரோனா காலத்தில் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து செந்தில், கார்த்திகேயன், குருநாதன், கமலக்கண்ணன் ஆகிய நான்கு மாற்றுத்திறனாளி மகன்களையும் தாய், தந்தையினர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர். இதில் இரண்டாவது மகன் சரவணனுக்கு எந்தவித குறைபாடும் இல்லாத நிலையில் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார்.
திடீர் குறைபாடு
இந்த சூழலில் மற்ற நான்கு மாற்றுத்திறனாளி மகன்களுடன் தாய் தந்தையினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வாலிப பருவத்தில் மாற்றுத்திறனாளிகள் நான்கு பேரும் எந்தவித குறையும் இல்லாமல் பணிக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் வருடங்கள் செல்லச் செல்ல உடலில் குறைபாடு ஏற்பட்டு நடக்க முடியாத சூழலுக்கு 3 பேர் தள்ளப்பட்டுள்ளனர். இக்குடும்பத்தில் சற்று படித்து திருவாவடுதுறை பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வரும் செந்தில்குமார் என்பவருக்கும் தற்போது உடல்நிலை குன்றத் துவங்கியதால் அக்குடும்பத்தினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாழ்வாதார பாதிப்பு
மேலும் செந்தில்குமாரின் வருமானத்தை வைத்தே ஒட்டுமொத்த குடும்பத்தை கரையேற்ற வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது உடல் நலத்தில் குறைவு ஏற்பட்டு கடுமையான ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்பு போன்று தற்போது யாரும் ரீசார்ஜ் செய்வதற்கு கடைக்கு வாடிக்கையாளர் யாரும் வராத நிலையில் கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்வதால் தனது தொழிலும் முடங்கிப் போக துவங்கியிருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோர்
மருத்துவமனைக்குச் சென்று மேல் சிகிச்சை பெரும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லாமல் இக்குடும்பத்தை வறுமை வாட்டி வதைக்கும் காரணத்தால் தங்களது அக்காவை போலவே தாங்களும் இவ்வுலகத்தை விட்டு சென்று விடுவோமோ என கனத்த குரலுடன் மாற்றுத்திறனாளி மகன்கள் தெரிவித்து இருப்பது நம்மை கலங்கச் செய்துள்ளது. மேலும் நாட்கள் செல்ல செல்ல உடல் நலம் மோசமாகிக்கொண்டே செல்வதால் தங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க போகிறேன் என அறியாமல் வயதான தம்பதியினர் அவர்களைப் தினம்தோறும் பார்த்து கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
அரசு உதவ கோரிக்கை
எனவே தமிழக அரசு மாற்றுத்திறனாளி நான்கு பேருக்கும் போதிய மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கில் ஏதேனும் பணி அல்லது சுய தொழில் தொடங்க வழிவகை வேண்டும் என மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாய்க்கும், காலம் முழுவதும் தனது இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் தந்தைக்கும் ஏதேனும் தங்களால் முடிந்ததை செய்து விடமாட்டோமா என மாற்றுத்திறனாளி மகன்கள் ஏக்கத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் மகன்களுக்கு யாரேனும் கடவுள் உருவத்தில் வந்து உதவி செய்ய மாட்டார்களா என வயதான பெற்றோர்கள் விழி மீது வழி வைத்து காத்திருக்கின்றனர்.