மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். பாரத பிரதர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18 -ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிமீ தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணமாக வடிவமைக்கப்பட்டது. பல்வேறு சூழ்நிலைகளை கடந்து அண்ணாமலை யாத்திரையை செயல்படுத்தி வந்தார். பல கட்டங்களை கடந்து, கடந்த ஜனவரி 20 -ஆம் தேதி நடை பயணம் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களுக்காக என் மண் என் மக்கள் யாத்திரை பயணம் தடைப்பட்டதால் தற்போது பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த நடை பயணத்தை முடிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் என் மண் என் மக்கள் நடை பயண யாத்திரையை 78 வது நாளாக நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியிலும், இரவு 10 மணியளவில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோயில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து 79 ஆவது நாளாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தனது பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. பி.எம். கிசான் திட்டத்தில் ஆறு லட்சம் விவசாயிகளை பல்வேறு காரணங்கள் கூறி தமிழ்நாடு அரசு திட்டத்திலிருந்து நீக்கி உள்ளது.
மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும், இவற்றை மாநில அரசு உதவியுடன் தான் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதனை தமிழக அரசு தலைகீழாக நின்று தடுப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. 100 நாள் திட்டத்திற்கான நிதி பாக்கியதும் மத்திய அரசு வழங்க வேண்டியது இல்லை அனைத்தையும் வழங்கி விட்டது. பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரச்சனை இன்றி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சர்வே செய்யும் வட்டாட்சியர்கள சரியான ரிப்போர்ட் அளிக்காத பட்சத்தில் காப்பீடு தொகை வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை கவனத்தில் எடுத்து சரி செய்து தர நடவடிக்கை எடுப்போம்.
ஐநா சபை உலகத்தின் தன்மையை ரிப்ளை பண்ணாமல் பழைய ஓல்ட் மெம்பர் கிளப் போன்று செயல்பட்டு வருகிறது. ஐநா சபையில் ரீபார்ம் நடைபெற வேண்டுமென எண்ணுகிறோம். அவ்வாறு நடக்கும் சமயத்தில் மோடி அவர்களின் காலத்தில் ஐநாவில் நிரந்தர மெம்பராக நிச்சயம் இணைவோம் என தெரிவித்தார். மேலும் திமுக ஊழல் பட்டியல் போன்று அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் மட்டுமே ஊழல் பட்டியலை வெளியீட்டு வருகிறேன். என்னுடன் இணைந்து பத்திரிகையாளர்களும் பட்டிலை வெளியீட வேண்டும் என மழுப்பலான கூறி சென்றார்.