நாடாளுமன்ற தேர்தல்


இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டம் அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுப்பட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது. இந்நிலையில் வரும் 22 -ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 




இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மயிலாடுதுறை வேட்பாளர்


அந்த வகையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜுன் மகன் பாபுவை அறிவித்துள்ளது அதிமுக தலைமை. பவுன்ராஜ் 1986- ல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு வரை செம்பனார்கோவில் ஒன்றிய கிளை செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர் ஒன்றிய  துணைச் செலாளராக பொறுப்பேற்று ஒன்றிய செலாளராக இருந்தார். தொடர்ச்சியாக இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவுன்ராஜ் தற்போது தனது மகனுக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தனது செல்வாக்கை பயன்படுத்தி பெற்றுள்ளார்.




மயிலாடுறை வேட்பாளர் விபரம்


மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. 43 வயதாகும் இவர் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். விவசாயம் மற்றும் அரசியலில் ஈடுபட்டுவரும் பாபு தற்போது மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்து வருகிறார். இவர் முமுழுக்க முழுக்க தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இத்தேர்தலில் களம் காண்கிறார்.


 




பவுன்ராஜ்


மயிலாடுதுறை தொகுதி கள நிலவரம்


மயிலாடுதுறையில் அதிமுகவை எதிர்த்து நேரடியாக திமுக போட்டியிடாத நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் களம் காண்கிறது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகுமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில், மீண்டும் பாராளுமன்ற தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.


வெற்றி வாய்ப்பு எப்படி?


இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் திமுக காரன் தான் ஓட்டு போட்டு காங்கிரஸ் கட்சிக்காரரை எம்எல்ஏவாக உருவாக்கினோம் என எம்எல்ஏவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது போன்ற சூழலில் மீண்டும் காங்கிரசுக்கு தகுதியை ஒதுக்கியதால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், மயிலாடுதுறை பாராளுமன்ற  தொகுதிக்கு அப்பாற்பட்ட நபரை வேட்பாளராக அறிவிக்க கூடாது என மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சூழலில் அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.