மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த பலநூறு ஆண்டுகள் பழமையான காவிரி துலாக்கட்டம் குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து தற்போது பொதுப்பணித்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மிக பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டம். இதனை இந்துக்கள் மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். இங்கு ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில்  மக்கள் தங்களின் பாவங்களைப் போக்க புனித நீராடியதால் நதி முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.  இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட புண்ணிய நதிகள், தங்கள் பாவத்தை போக்கிக்கொள்ள ஐப்பசி மாதம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுவதாக புராணம் தெரிவிக்கின்றது. 




 


இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருவம்கொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். 




துலா உற்சவம்


இத்தகைய சிறப்பு மிக்க மயிலாடுதுறை காவிரியில் ஆண்டுதோறும்  ஐப்பசி மாதம் 30 -ஆம் நாள் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற துலா உற்சவ, கடை முக தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெறும்‌. இதில் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களான மயூரநாதர், ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் ஆலயங்களிலிருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு கரைகளிலும் கடைமுகத் தீர்த்தவாரி நடைபெற்றும். 


இங்கு 2017 -ஆம் ஆண்டு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழா விழா சிறப்பாக நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள், சங்கராச்சாரியார்கள், ஆதீன மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். இந்நிலையில் இப்படிப்பட்ட பெருமைமிக்க துலாக் கட்ட பகுதியை முழுமையாக பராமரிக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. 




சரிந்து விழுந்த துலாக்கட்டம்


இந்த சூழலில் திடீரென்று நேற்று முன்தினம் துலா கட்டத்தின் தெற்குப்புற கிழக்குப் பகுதியில் மழையினால் அரிப்பு ஏற்பட்டு 20 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் அளவிற்கு சரிந்து விழுந்து விட்டது. மேலும் தடுப்புச் சுவரின் மற்ற பகுதிகளில் தொடர் விரிசல்கள் காணப்படுகிறது. துலா கட்ட மண்டபத்தையும் தெற்கு பகுதி சாலைகளையும் இணைக்கும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் கடக்கும் பகுதியாகவும் உள்ளது. மேலும் மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதினால் அடுத்தடுத்த நாட்களில் அதீத மழை இருக்கும் என்ற எச்சரிக்கை அடுத்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரிந்து விழுந்த கான்கிரீட் சுவர் கட்டையை சீரமைத்து பெரும் விபத்தும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுப்பதுடன், மேலும் தொடர் சரிவு ஏற்படாமலும் காத்திட வேண்டும்.




சரிந்து விழுந்த துலாக்கட்டம் சீரமைப்பு 


மேலும் இப்பகுதி முழுவதும் உள்ள சாலைகள், பாலம், கைப்பிடி சுவர், மண்டபம், தெரு விளக்குகள் ஆகியவற்றையும் தொடர் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் காவிரி ஆற்றுக்குள் தூய்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் உள்ளிட்ட மேலும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை செய்தியாக ஏபிபி நாடு செய்தி தளத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று அதனை சீரமைக்கும் பணியினை பொதுப்பணித்துறையின் மேற்கொண்டுள்ளனர்.