தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏகலூத்து சாலையில் வசித்து வரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகி சிலம்பரசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் கம்பம் பகுதியில் காளவாசலில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் ஏற்பட்ட இடப் பிரச்சினை சம்பந்தமாக தன்னை சிலர் தாக்கியதாக கூறி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சிலம்பரசன் புகார் அளித்திருந்தார்.
காவல் நிலையத்திற்கு செல்ல தனக்கு உதவியாக இருப்பதற்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த சிலரை அழைத்து சென்றபோது அவர்களுக்கும் சிலம்பரசனுக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் சிலம்பரசன் அந்த கட்சியில் இருந்து விலகி தேனி மாவட்டத்தில் இருக்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டின் அருகே தன் சொந்த செலவில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் கொடியை தான் ஊன்றி வைத்ததாகவும் அதனை அகற்றிவிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கொடியை நடுவதற்கு சென்றபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்ப பிரச்சனையை போலீசார் விசாரணை செய்தபோது சிலம்பரசனுக்கு எதிராக கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா செயல்பட்டதாக கூறி கடந்த 31 ஆம் தேதி வீட்டில் அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடுமையான தீ காயம் ஏற்பட்ட நிலையில் தனது இறப்புக்கு கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் காரணம் எனக் கூறி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு சிலம்பரசன் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட தெற்கு காவல் நிலைய போலிசாரிடம் கேட்டபோது சிலம்பரசன் குடி வெறியில் தீ வைத்துக்கொண்டதாகவும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X