சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குவது காரைக்குடி. காரைக்குடி அருகே அமைந்துள்ளது சாக்கோட்டை விளாிரகாடு கிராமமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். அவருக்கு வயது 23. காத்தலிங்கம் சிற்பி ஆவார். இவர் பெங்களூரில் சிற்பி பணியை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் பெங்களூரிலே தங்கியிருந்த காத்தலிங்கம், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்று சொந்த ஊரான சாக்கோட்டை விளாரிகாட்டிற்கு வந்துள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பிய உற்சாகத்தில் நண்பர்களான அருண் மற்றும் கவிராஜை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பணம்பட்டி மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு மீண்டும் மதுவாங்க முயற்சித்தபோது அவர்களிடம் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். பணம்பட்டி அருகே இருந்த புதுவயலில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வாகனத்தை சரியாக ஓட்ட முடியாமல் ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது, கருநாவல்குடி வளைவில் சென்றபோது அந்த இடத்தில் இருந்த பாலத்தில் மோதி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.
அந்த விபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய காத்தலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார். அவரது நண்பர்களான அருண் மற்றும் கவிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த அருண் மற்றும் கவிராஜை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த காத்தலிங்கத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய சிற்பி, ஊருக்கு வந்த முதல் நாளிலே மதுபோதையால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளான அவர், அதிலிந்து மீண்ட சந்தோஷத்தை கொண்டாடவும், ரிலாக்ஸ் செய்யவும் தான் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். ஆனால் முதல் நாளே அவரது முடிவு நாளாக மாற்றிவிட்டது மதுபோதை. நண்பர்கள் அடுத்தடுத்து கூடுதல் மது கேட்டதால், அதை வாங்குவதற்கா எடுத்த முயற்சியும், கட்டுப்பாடு இல்லாத சூழலும் தான் இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உறவினர்கள் இறந்த இளைஞரின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.