மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த கலாவதி,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கல்லூத்து கிராமத்தில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கல்யாணிபட்டி விலக்கு பகுதியில், டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இங்கு டாஸ்மாக் கடையை திறந்தால் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாவர். எனவே, கல்லூத்து கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது" என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு, கல்லூத்து கிராம மக்கள் மதுக்கடையை திறக்க விரும்பாத போது அங்கு ஏன் டாஸ்மாக் கடையை திறக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், "அப்பகுதியில் சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "அவ்வாறெனில் கஞ்சா உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதையும் சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பினர்.மனுதாரர் தரப்பில், ஏற்கனவே ஊர் மக்கள் தரப்பிலிருந்து தங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


அதற்கு நீதிபதிகள் அவ்வாறெனில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டாலும் கிராமத்தினர் சுயகட்டுப்பாட்டுடன் செல்லாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டாலும் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அருகமை மாநிலங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று மது வாங்க குடிமகன்கள் தயாராக உள்ளனர். ஒருவேளை இந்தியாவிலேயே மது தடை செய்யப்பட்டாலும் வெளிநாடுகளுக்குச் சென்று மது வாங்கவும் தயாராகவே உள்ளனர். எல்லா விஷயங்களுக்கும் அரசை மட்டும் குறை கூறக்கூடாது. ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்யவும், அதற்கான அறிக்கையை டிசம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.





 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க கோரிய வழக்கு தள்ளுபடி 

 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் சூழலில், ஒட்டுமொத்தமாக 1,228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்று மொழிகளாகவோ, பாடமாகவோ இல்லை. அதனால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத பிற மொழி பேசும் மாணவர்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது உறுதியாகிறது. இலவசக் கல்வி எனும் பெயரில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல் தெரிகிறது. 

 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக கேந்திரியா வித்யாலயாவில் பயிலும் ஒரு மாணவன் 16 வயதுக்குப் பின்னர் தமிழ் பேசலாம், ஆனால் அவனுக்கு தமிழ் எழுதத் தெரியாது என்ற நிலை உருவாகிறது. இதனை நோக்கமாகக் கொண்டே மத்திய அரசு செயல்படுத்தும் போல் தெரிகிறது. 

 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 271 மாணவர்கள் பயிலும் சூழலில் 95% மாணவர்கள் ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. ஆகவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



 

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் மத்திய அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆகவே அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது. தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து பயிலும் வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. வழக்கு தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று  நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.