சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. மீனாட்சியாளும் மதுரையில் 2022-நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் பெண் வேட்பாளர்தான் மேயராக உள்ளார் என்பதும் சிறப்புடையது.



மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும் அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற்றது. 100 மாமன்ற பதவிகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 815 வேட்பாளர்களும். 3 நகராட்சிகளில் 78பதவிகளுக்கு 335வேட்பாளர்களும், 9 பேரூராட்சிகளில் 126பதவிகளுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மதுரை மாவட்டத்தில்  ஒட்டுமொத்தமாக 313 பதவிகளுக்கு 1702 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். மாவட்டத்தில் 322 பதவிகளில் பாலமேடு, வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் 9பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 313 பதவிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.





 


தேர்தல் அன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,615 வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி பொறுத்தப்பட்டது. 338 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 127 வாக்குச்சாவடிகளை வெப் லைவ் கேமிரா மூலமாக நேரடியாக மாநில தேர்தல்  ஆணையத்தால் கண்காணித்தனர். 211 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு  பார்வையிட்டார்கள்.

 

வாக்குப்பதிவு பணிகளில் 7,760 தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1,933 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,866 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.  வாக்குப்பதிவை முன்னிட்டு மாநகரில் 1750 காவலர்களும், புறநகரில் 2 ஆயிரம் காவலர்கள் என 3750காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.




மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர் என்பதால் அதிகளவு பெண்கள் போட்டியிட்டனர். இளம் பெண்கள், பட்டதாரிகள், திருநங்கைகள் போட்டிக்களத்தின் நின்றனர். மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் என 6 பொறுப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் தி.மு.க 77- இடங்களில் நேரடியாக களம் கண்டுள்ளது.

 

திமுகவில்  தோழமை கட்சிகள் நிற்கும் பல இடங்கள் தி.மு.க ஆதரவாளர்கள் பலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றியை சற்று சவலாக்குகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த இடங்களில் மட்டும்தான் வெற்றியடையும் என சொல்லப்படுகிறது. 


மேயர் பதவி தலையீட்டில் அமைச்சர் பி.டி.ஆர் தலையீடு அதிகளவு இருக்கும் என்பதால், துணை மேயர் பதவிக்கு அமைச்சர் பி.மூர்த்தி சொல்லும் ஆட்களை தான் போடப்படும்  என சொல்லப்படுகிறது. மேயர் பதவி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கண்ரோல் என்பதால் முக்குலத்தோரில் யாருக்கும் மேயர் பதவி வழங்கப்படாதாம். மதுரை தி.மு.க.,வில் பல்வேறு பதவிகளில் முக்குலத்தோர் அதிக அளவில் இருப்பதால் மேயர் பதவி முக்குலத்தோருக்கு எட்டாக் கனியாக இருக்கும். எனினும் எப்படியாவது மேயர் பதவியை வாங்கிவிட வேண்டும் என பெண் வேட்பாளர்களின் நெருக்கமானவர்கள் முயற்சித்து வருகின்றனர். வாசுகி சசிக்குமார், பாமா முருகன், ரோஹினி பொம்மதேவன், விஜய மெளசினி, செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலரும் ரேசில் உள்ளனர். துணை மேயருக்கு ஜெயராமன்  உறுதியாக சொல்லப்படுகிறது.


 அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் சண்முகவள்ளிக்கும், முன்னாள் மேயரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராஜன்செல்லப்பா தனது ஆதரவாளரான சண்முகப்பிரியா ஹோசிமினுக்கும் சீட் வாங்கி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவர்கள் வெற்றி பெற்று வந்தால் இவர்கள்தான் மேயர் வேட்பாளர் என்று அ.தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. 30-க்கும் அதிகமான சீட்டுகளை பெறும் என உளவுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது.

 

ஒருவேளை மெஜாரிட்டி எண்ணிக்கையை அ.தி.மு.க பெறவில்லை என்றால் உளவுத்துறை ரிப்போர்ட்  படி 30-க்கு மேல் சீட்டுகளை  அதிமுக பெற்று ,  சுயேச்சையாக வெற்றி பெறும்சிலரும், பாஜகவில் வெற்றி பெறுபவர்களும் இணைந்து துணை மேயரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது . இந்த ரேசில் 32 வது வார்டில் போட்டியிடும் மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ள சுகந்தி அசோக்கும் உள்ளார் என்று கூறப்படுகிறது.



அதே போல், 64 வது வார்டில் போட்டியிடும் சோலைராஜாவிற்கு துணை மேயர் பதவி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் மண்டல தலைவராக இருந்து மீண்டும் 16வது வார்டில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெயவேலும், துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

 

மேலும் முதலில் செல்லூர் ராஜூவால் மறுதலிக்கப்பட்டு, தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வரை சென்று சீட் பெற்று வந்த சாலை முத்துவும் துணை மேயர் ரேசில் வருவார் என தெரிகிறது. மேலும் இந்த முறை மதுரை மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் 10-க்கும் மேற்பட்ட சீட்டுகளை பிடிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

இதனால் மதுரை மாநகராட்சி தேர்தல்  சூடுபறக்கிறது. 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி தி.மு.க கூட்டணி 70 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதால், தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேயர் வேட்பாளர் யார் என்று தெரிந்துவிட்டால் உள்ளடி வேலைகள் நடைபெறும் என்பதால் தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்துகொள்ளலாம் என முடிவில் இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகிறது.



 

ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகிய மூன்று நபர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மும்மூர்த்திகள் என புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆனாலும் மாநாகராட்சியில் பல வார்டுகள் அ.தி.மு.கவிற்கு சாதகம் இல்லாமல் இருப்பதால் செல்லூர் ராஜூ கலக்கத்தில் உள்ளார். இந்நிலையில் திமுக மேயர்,  துணை மேயர் யாரைப் போடுவது என ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட்டதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.

 

அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல்ராசன் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் எடுக்கும் சுமூக முடிவால் மேயர் துணை மேயரை யார் என்பது தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் தெரியவரும் என்கின்றனர் தி.மு.க வட்டாரங்கள்.


 

  " >நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும்