வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் திறக்கப்பட்ட நீரின் காரணமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லம்பட்டி, கொடிக்குளம், முதலைக்குளம், விக்கிரமங்கலம், நாட்டாமங்கலம், வின்னகுடி, கருமாத்தூர், முண்டுவேலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர்.

 





இந்த நெற்பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வின்னகுடி, நாட்டார்பட்டி, கொடிக்குளம், முன்டுவேலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.



 

அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை தொட்டத்தின் அருகிலேயே சிறிய அளவில் பாதுகாத்து வருவதாகவும், அரசு விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொடுத்தால் நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து தை திருநாளை கொண்டாட வசதியாக இருக்கும் எனவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.