அண்மையில் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரப்படி 142 அடிநீர் தேக்கப்படுவதற்கு முன்பே தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து “கேரளாவிடம் தமிழக உரிமையை திமுக அரசு அடகு வைத்துவிட்டது” என்று எதிர்க்கட்சியான அதிமுகவும், “ஸ்டாலின் கேரளாவின் காலில் விழுந்துவிட்டார்” என்று பிஜேபியும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றன. இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நாங்கள் யார் காலிலும் விழவில்லை. மத்திய நீர்வளக் கமிஷனின் ‘RULE CURVE’ விதிமுறையின்படிதான் தண்ணீர் திறந்துவிடப்படுள்ளது” என்று கூறினார்.




Rule Curve  என்றால் என்ன?


‘RULE CURVE’ என்பது ஒரு அணையில் தேக்கப்படும் அதிகபட்ச நீர் மட்டத்தின் அளவைக் குறிக்கிறது. ஒரு ஆண்டில் நிலவும் வெவ்வேறு பருவகால சூழலுக்கு ஏற்ப, அணையின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அந்த அணையில் எத்தனை அடி உயரத்திற்கு நீர் தேக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு அறிவியல் முறையாகும். இது ஒரு அணையின் "முக்கிய பாதுகாப்பு" பொறிமுறையின் ஒரு பகுதியாகும். ஒரு ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்குமான அணையின் நீர் தேக்கும் அளவு(RULE CURVE) மத்திய நீர்வளக் கமிசனால்(CWS) நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக கனமழைப் பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயக் காலங்களில் அவசியம் கருதி இந்த அளவு 10 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு அணையின் கேட் திறப்பு அட்டவணை, அதாவது அணையின் நீர் வெளியேற்றும் கதவுகள்(shutter) எப்போது, என்ன அளவுக்கு திறக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்பது, ‘விதி வளைவை’(rule curve) அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.




இந்த rule curve விதியின் அடிப்படையில்தான் முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்க மட்டத்தை 136 அடியிலிருந்து 130 அடியாகக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் கேரளா வழக்கு தொடர்ந்தது. இதற்கு வலுசேர்க்கும் வகையில், “100 ஆண்டு பழமையான அணை, அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 50 லட்சம்பேரின் உயிர் பாதுகாப்பு” போன்ற காரணங்களை முன்வைத்து வாதாடியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் செயல்படும் ஒரு  ‘தொழிநுட்ப வல்லுனர் குழு’ அமைக்கப்பட்டது. இக்குழு நவீன அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் அணையை பலப்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிந்துரைகளை வழங்கியது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, தொழில்நுட்ப வல்லுனர்களின் வழிகாட்டுதல்படியே அணையின் பலப்படுத்தும் வேலைகளை செய்துமுடித்தது. வனத்துறையின் தலையீடு காரணமாக பேபி அணையின் வேலைகள் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன்பின், தமிழக அரசு மேற்கொண்ட பலப்படுத்தும் பணிகளை ஆய்வுசெய்த தொழில்நுட்ப வல்லுனர்குழு, அணையின் முழுமையான நீர்தாங்கும் திறனை உறுதிசெய்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் முல்லைப்பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்தேங்கும் அளவாக 142 அடியை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் வரையறை செய்தது.




2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளசேதத்திற்கு, “தமிழக அரசு முன்னறிவிப்பின்றி முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 13 சட்டர்கள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டதுதான் காரணம்” என்று கேரள அரசு தொடர்ச்சியாக தமிழகத்தின்மீது பொய்குற்றம்சாட்டி வந்ததுடன், மத்திய நீர்வளக் கமிசனிடமும் முறையிட்டு வந்தது. இதே காரணங்களை முன்வைத்து 2019 முதல் உச்சநீதிமன்றத்தில் அடுக்கடுக்கான பிரமாணப் பத்திரங்களை தாக்கல்செய்து “அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 142 அடி என்பதை மறுவரையறை செய்யவேண்டும்” என்று கேரள அரசு வலியுறுத்தி வந்தது.


இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஏ.M தலைமையிலான பெஞ்ச், கடந்த 2021 மார்சில், “அணையின் செயல்திறன் மற்றும் கருவிகளின் கண்காணிப்பு, 'விதி வளைவை' இறுதி செய்தல், மற்றும் கேட் இயக்க அட்டவணையை சரிசெய்தல் ஆகிய ஒருங்கிணைந்த மூன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அணையின் கண்காணிப்புக் குழுவிற்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய நீர் ஆணையம் (CWC.) தமிழகத்துடன் பலகட்ட ஆலோசனைகள் நடத்தி இறுதியாக, கடந்த செப்டம்பர் 20-ல் முல்லைப்பெரியாறு அணைக்கான விதி-வளைவு(rule curve) மட்டத்தை 142 அடியாக நிர்ணயம் செய்தது. ஆனால் கேரள அரசோ வழக்கம்போல இதனையும் ஏற்கமறுத்து 140 அடியாக குறைக்கக் கோரியது.




ஆக, rule curve என்ற புதிய விதிமுறை திமுக ஆட்சியில் புதிதாக முளைத்த விசயமல்ல. அதிமுக ஆட்சி நடத்திய கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்கப்பட்டு வரும் விசயம்தான்.  “இந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் பலத்த மழை பெய்துவரும் நிலையில்,  முல்லைப்பெரியாறு நீர் மட்டம் அதிகரித்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் அதிகளவு நீரால் ஏற்கனவே நிரம்பியுள்ள இடுக்கி நீர்த்தேக்கத்தை பாதிக்கும்” என்றும்,


"பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கேரளா முன்மொழிந்த விதி வளைவின் அடிப்படையில் நவம்பர் 30 அன்று நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்டம் 140 அடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று கேரள அரசு கேட்டுக்கொண்டது.  இதுதவிர உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட 300 பக்க பதில் பிரமாணப் பத்திரத்தில்,   2018 மற்றும் 2019 வெள்ளத்தின் போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்த சம்பவங்கள் மற்றும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதையும் சுட்டிக்காட்டிய கேரள அரசு,


“காலநிலை மாற்றம், பெரியாறு அணையின் போதுமான ஸ்பில்வே திறன் இல்லாமை, சுரங்கப்பாதைகளின் குறைந்த நீர் வெளியேற்றும் திறன், தீவிர வெள்ளம் ஏற்பட்டால் இடுக்கி நீர்த்தேக்கம் வெள்ளநீரை வைத்திருக்க இயலாமை மற்றும் பேரழிவுகரமான நிகழ்வு ஏற்பட்டால் உயிர் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரிய சேதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ‘விதி வளைவை’ தீர்மானிக்க வேண்டும்” என்று தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.  




இதனையடுத்து, அக்டோபர் 28-ல் நாள்முழுவதும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி A.M. கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், கேரளாவின் அடாவடி வாதங்களை “உங்கள் அரசியல் விளையாட்டுகளுக்கு நீதிமன்றத்தை களமாகப் பயன்படுத்தக்கூடாது” என்று கண்டித்ததுடன், “நீர்வளக் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இருமாநில அரசுகளும் கட்டுப்பட வேண்டும் என்றும், அதன்படி அக்டோபர் 31 வரை அணையில் அதிகபட்சமாக 138 அடி நீரையும் நவம்பர்1 முதல் 10 வரை 139.5 அடி நீரை தேக்கலாம்” என்றும் உத்தரவிட்டது.


நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, உச்சநீதிமன்றம் வரையறுத்த அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை பராமரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கியது. சனிக்கிழமை (30-10-2021) அணையின் ஆறு ஷட்டர்கள் வழியாக தண்ணீரை திறந்துவிட்டது.  இதன்மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 2974 கன அடி நீரை விடுவித்தது தமிழக அரசு.




இதனையடுத்து  ஞாயிற்றுக்கிழமை(31-10-2021) முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் மெதுவாக சரியத் தொடங்கியது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை 138 அடி என்ற விதி வளைவு மட்டத்திற்கு (அணையின் ஒவ்வொரு நாளும் பராமரிக்கப்பட வேண்டிய நீர் மட்டம்) அணையின் நீர் மட்டம் இறங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.70 அடியாக நீடித்தது. இதனை சுட்டிக்காட்டி “உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறிவிட்டது” என கேரளா மத்திய நீர்வளத்துறையிடம் முறையிட்டது.


இதன்பின் நடந்த இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகளின் அடிப்படையில் மேலும் அதிகளவு நீரை வெளியேற்றி நீதிமன்றம் வரையறுத்த நீர்மட்ட அளவை பராமரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இவ்வாறு உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய நீர்வளக் கமிசன் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு  முறையாக செயல்படுத்தியுள்ளது. தற்போது திமுக ஆட்சி இருந்ததால் மட்டுமல்ல எந்த ஆட்சி தற்போது இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்காள்.