Budget 2024
பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டானது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.
பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படும் அல்வா விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பட்ஜெட் மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எதிர்பார்ப்பு:
2024-க்கான முதல் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதன் எதிர்பார்ப்பு குறித்து பேராசிரியர் முனைவர். சி.முத்துராஜா , மதுரை அமெரிக்கன் கல்லூரி தலைவர், பொருளாதாரத்துறை தலைவர் தெரிவித்தது,” இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பணிகளை சில வருடமாக செய்து வந்தாலும் போதிய அளவு இல்லை. எனவே அது தொடர்பாக பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதேபோல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்டில் முக்கியத்துவம் இருக்குமென நினைக்கிறேன். இதனை எந்தெந்த துறையில் வழங்க முடியும் என திட்டமிட்டு செயல்படுவதற்கான முயற்சி இருக்கலாம். அது தொடர்பாகவும் பட்ஜெட்டில் திட்டம் இருக்கலாம்.
பெண்கள் முன்னேற்றம்:
தற்போது மத்தியில் ஆளுகின்ற அரசு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை போதுமான அளவில் வழங்கவில்லை. அதனால் பெண்களும் பெண் குழந்தைகள் சார்ந்த முன்னேற்றத்திற்கான திட்டங்களை போதுமான அளவு வகுக்க வேண்டும். அதேபோல் தேர்தல் பொருளாதாரம் என சொல்லப்படும் சில திட்டங்கள் எல்லோருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. ஊரக மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு அதனை அதிகளவு செய்ய வேண்டும். இதனால் பெரும்பான்மையானோர் பயனடைய வாய்ப்புள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் உயர்கல்வி சார்ந்த நிறுவனங்களை மேம்படுத்துதல் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவைகளை செய்யலாம்.
சிறு, குறு தொழில்கள்:
சிறு குறு தொழில்கள், ஸ்டார்ட் அப் தொழில்களுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை கவரும் வண்ணம் திட்டங்கள் இருக்கலாம். தேர்தல் நெருங்கும் வேலை என்பதனால் இது போன்ற பெரும்பான்மையான இருக்கும் நபர்களுக்கான திட்டம் இருக்கலாம். கவரும் திட்டங்களையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் தேர்தலை முன்னிட்டு வரி மாற்றம் குறித்த திட்டம் இருக்கலாம். வருமான வரி, சொத்துவரி என பல்வேறு வரிகளில் இருந்து சிறிய மாற்றங்கள் இருக்கலாம். அவர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், தேர்தலுக்காக இதை மாற்றினோம், இதை செய்தோம் என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சில மாற்றங்களை வரி சார்ந்து அதன் விதிவிலக்குகள் அல்லது குறைப்புகள் நடக்கலாம். அதனால் பசுமை பொருளாதாரம் பெண்கள் சார்ந்த முன்னேற்றம் தொழில் நிர்வாகம் வரிசுமை குறைப்பு இது போன்ற விஷயங்கள் அதிக அளவு இருக்க வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்தியா பெரிய வளர்ச்சி, முதலீடு முன்னேற்றம் போன்றவற்றில் தற்போது வரை தன்னிறைவு அடையாமல் தான் உள்ளது. இதனால் அதற்கான முயற்சிகள் சார்ந்து வரும் பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.