”தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.  கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக, கடந்த 2022-ம் ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 12 அரைகோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



 

மேலும் இதே போல் மற்ற கஞ்சா வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக கடந்த 2022-ம் ஆண்டில், தென்மண்டலத்தில், 1091 கஞ்சா வழக்குகளில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய 1956 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1377 குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை பிணையபத்திர விதிமுறைகளை மீறிய 58 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு ஜனவரி மாதம் மட்டும் 255 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது.



 

மேற்கண்ட நடவடிக்கைகளோடு தற்போது கஞ்சாவிற்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையாக கஞ்சா வழக்குகளில் தண்டனை பெறும் குற்றவாளிகள் மீது, நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்புரைக்கும் சமயத்தில் NDPS Act பிரிவு 34-ன் கீழ் கணம் நீதிமன்றமானது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறலாம் என்ற அடிப்படையில் தற்போது தென்மண்டலத்தில் 54 கஞ்சா குற்றவாளிகள் மீது கணம் நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வாக தற்போது கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் குற்ற போக்கை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அவர்கள் மீது சரித்திர

பதிவேடு தொடங்கப்பட்டு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.  அவ்வாறாக இதுவரை மதுரை மாவட்டம்-85, விருதுநகர் மாவட்டம்-132, திண்டுக்கல் மாவட்டம்-131 தேனி மாவட்டம்-59, இராமநாதபுரம் மாவட்டம்-26, சிவகங்கை மாவட்டம்-26, திருநெல்வேலி மாவட்டம்-46, தென்காசி மாவட்டம்-15, தூத்துக்குடி மாவட்டம்-28, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம்-59 மற்றும் திருநெல்வேலி மாநகரம் - 17 என தென்மண்டலத்தில் மொத்தமாக 624 குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர்கள் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தும், அவர்களின் மேற்பார்வையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தீவிர நடவடிக்கையில் கஞ்சாவிற்க்கு எதிரான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சாவிற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடப்படுகிறது. என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.