மதுரை திருப்பரங்குன்றம் அருள்நகரை சேர்ந்த நாகமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76வது வார்டு பகுதியில் அருள்நகர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, வ.உ.சி தெரு என பல்வேறு தெருக்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதியில் வசித்து வருகின்றோம். இந்நிலையில் மதுரை மாநகராட்சி எங்களிடம் வீட்டு வரி, சாக்கடை வரி என பல்வேறு வரிகளை வசூல் செய்து வருகின்றன. ஆனால் இந்தப் பகுதியின் எந்த அடிப்படைத் தேவையையும் பூர்த்தி செய்யவில்லை.
இந்த பகுதியிலுள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பாதாள சாக்கடை தெருக்களில் தேங்கி நின்று தொற்றுநோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் அதிகாரிகளிடமும் பல்வேறு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "குடிமக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யவில்லை என்றால் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மனுதாரர்களின் கோரிக்கை அடிப்படைக் கோரிக்கை. இதில் கவனம் செலுத்த வேண்டும்" என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் இந்தப் பகுதியை சரி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.