வீர பாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்தநாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, காயத்ரி ரகுராம், மதுரை மாநகர் தலைவர் டாக்டர் சரவணன் , முன்னாள் சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அப்போது மாநிலத்தலைவர் அண்ணாமலை ”கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜக தோற்கடிக்கும் என ஆ.ராசா எந்த அர்த்தத்தில் பேசினார் எனத் தெரியவில்லை. பாஜக அனைவரையும் ஒருங்கிணைத்து செல்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல; அனைத்து நிறங்களும் தேவை. எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எல்லா நிறமும் எங்களுக்கு தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. ஆ.ராசா வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யட்டும்.



பி.ஜே.பியை பொறுத்தவரை எல்லா நிறங்களை வைத்தும், அனைத்து மக்களை வைத்தும் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறது. காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன் போல இருப்பதால்தான் ராகுல்காந்தி அவ்வப்போது பறந்து கொண்டே இருக்கிறார். ஒரு அகில இந்திய கட்சியின் தலைவர் அவ்வப்போது நாட்டை விட்டுபறந்து போகிறார். இதற்கு கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். பி.ஜே.பி நிலைப்பாடு ஒன்றே ஒன்று மட்டும் தான். இந்தியாவில் காங்கிரஸ் முடித்து வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அது விரைவில் நடக்கும்.



நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பாகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வைகோ பேசியது குறித்த கேள்விக்கு.

உபியில் 2019ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பி.ஜே.பியை எதிர்த்து பார்த்தார்கள். அது நடைபெறவில்லை. எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பி.ஜே.பியை தோற்கடிக்க முடியாது என தெரிந்து தான் தற்போது உபியில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கிறார்கள்.

அது போல வைகோ வேகமாக பேசுகிறார். எத்தனை கட்சிகள் பி.ஜே.பி எதிராக சேர்ந்தாலும் கூட மக்கள் பி.ஜே.பி பக்கம் உள்ளனர். எனவே அது பற்றி கவலையில்லை. பி.ஜே.பி  நிகழ்ச்சி மாநில அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் படி தான் நடக்கும். அதில் தெளிவாக உள்ளோம். பாரத பிரதமரின் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி. மாநில அரசு பிரதமரை அழைத்துள்ளனர். அந்த நேரத்தில் பி.ஜே.பி கட்சி நிகழ்ச்சி நடத்த விரும்புகிறது. அது முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாடுகள் படி தான் நடக்கும். மாநில அரசின் கொரானா கட்டுப்பாடுகளை தமிழக பி.ஜே.பி ஒரு சதவீதம் கூட மீறாது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மத்திய அமைச்சர் சிந்தியாவின் கருத்தை மாற்றி திரித்து இங்கு பரப்புகின்றனர். யாரும் கலாச்சாரத்தை மாற்றவில்லை. காங்கிரஸ் தான் கலாச்சாரத்தை மாற்றுகிறது. மோடி எங்களோடு பொங்கல் கொண்டாடுவதால் அது மோடி பொங்கல். பி.ஜே.பி பொங்கல் விழா உறுதியாகி பிரதமர் மோடி நம்மோடு சேர்ந்து பொங்கல் வைத்தால் அது தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கு பெருமை.



 

 

திமுகவில் குழப்பம் உள்ளது. ஒரு புறம் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுகவினர் கூறும் போது, நிதியமைச்சர் வேண்டாம் என்கிறார். இதிலிருந்தே திமுகவில் குழப்பம், முரண்பாடு உள்ளது தெரியும். தமிழக மக்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவும், நிதியமைச்சரும் உட்கார்ந்து பேசி ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை வருமா வராதா என முடிவெடுத்து கூற வேண்டும்” என்றார்.