சொந்த ஊரில் ஓபிஎஸ் :


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு கட்சிக்கொடி மற்றும் கட்சி பெயர் பயன்படுத்தக்கூடாது என்ற நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் சுயேட்சையாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையிடம் பேசி முடிவெடுக்கப்பட்டு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.




பூஜை போட்டு வேலையை துவங்கிய ஓபிஎஸ் :


இதனிடையே  ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளதத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அவர் இன்று பெரியகுளத்தில் உள்ள வரதராஜர் பெருமாள் திருக்கோவிலுக்கு ஆதரவாளர்களுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வழிபாடு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்  அவரது ஆதரவாளர்களிடம் பேசியதாவது,


”வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதார செலவு ஏற்படும். அந்த செலவுகளுக்கு  பின்னாலும் பல்வேறு சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே  தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று  மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.




ஆதரவாளர்கள் சந்திப்பு கூட்டம்:


கடந்த 1999,ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்.பியானார். நலத்திட்டங்கள் மூலம் தாராள மனப்பான்மையை கற்றுக் கொடுத்தவர். அடுத்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினாலும் அவரது எண்ணம், செயல், இதயம் தேனியை சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.அதன்படி தேனி  தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட நாங்கள்  அபிப்ராயம் தெரிவித்தோம். அதன்படி தேனி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் டிடிவியை வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணி தலைமை, தொண்டர்கள் விரும்பினர். “நான் எங்கு போய் நிற்பேன்.




தேனி தொகுதியை விட்டுக்கொடுத்ததாக ஓபிஎஸ் பேச்சு:


தேனியில் தானே நான் நிற்க வேண்டும்" என்று டிடிவி தினகரனும் தேனியை விரும்பியதால். நமது நன்றி கடனாக தேனி தொகுதியை அவருக்கு தந்திருக்கிறோம். நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை ரகசியமாக வைத்திருந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான விடை அவர்களால் தான் தர முடியும். அதிமுக உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த  போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக வெளிப்படும் தொகுதி ராமநாதபுரம் தான். நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். டிடிவி தினகரனை அமோக வெற்றியடைய செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம்” ஓபிஎஸ் பேசினார்.