மதுரையில் கண்திருஷ்டி பெயரில் சாலைகளில் பூசணிக்காய் தேங்காய் உடைப்பதை கண்டிக்கும் விதமாக தன்னார்வலர் கைகளில் பூசணிக்காய் தேங்காய் ஏந்தி நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 

மதுரை மாவட்டத்தில்  கிராமசாலை முதல் தேசிய நெடுஞ்சாலை வரையிலும், முச்சந்தி, பொது வீதிகளிலும் பொதுமக்கள் ஆயுத பூஜை பண்டிகை, திருமண விழா, காதணி விழா, பூப்புனிதநீராட்டு விழா, புதுமனை புகுவிழா, புதிய கார் வாங்குதல், தொழிற்சாலை, வணிகர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோர் அவர் இருப்பிடம் அருகில் உள்ள போக்குவரத்து சாலை. பொதுவீதிகளில்  கண்திருஷ்டி கழிக்க  சாலைகளில் வெள்ளை பூசணிக்காய், தேங்காய்களை உடைத்து வரும் பழக்கத்தை வழக்கமாக  கடைபிடித்து வருகிறார்கள்.

 



கண்திருஷ்டி பொருட்களை சாலை, முச்சந்தி, பொது வீதிகளில் உடைத்து முடித்தவுடன் சிதறிக்கிடக்கும் அப்பொருட்களை அவ்விடத்தில் இருந்து உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல்  திரும்பி கூட பார்க்காமல் விட்டுச் செல்கிறார்கள். அதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழந்து  விபத்து ஏற்பட்டு விடுகிறது.



 

மேலும் சாலையில் சிதறிக்கிடக்கும் அப்பொருட்களை ஆடு, மாடு போன்ற விலங்குகள்  உட்கொள்ள சாலையை சுற்றி வருகிறது. இதனாலும் விபத்து நிகழ்கிறது என கூறி தன்னார்வலர் ஒருவர் கைகளில் பூசனிக்காய் தேங்காய் ஏந்தி நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்‌. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவரின் நூதன பிரச்சாரத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.



 

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் நம்மிடம் கூறுகையில், ”விஞ்ஞான காலத்தில் தற்போதும் பல்வேறு நம்பிக்கைகள் கைபிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை பிறரின் நிம்மதியை கெடுக்கும் விதமாக இருக்கக்கூடாது. சாலையில் தேங்காய், பூசணிக்காயை உடைத்துவிட்டு அதனை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிடுகின்றனர். அப்போது பிறருக்கு கடுமையான சாலை விபத்து ஏற்பட்டுவிடுகிறது. இதனை தவிர்த்து சாலையில் விபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இதனை காவல்துறை மூலமாக அரசு மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இது போன்ற விசயங்களை தவிர்க்க வேண்டும். இதனை வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விழிப்புணர்வு செய்து வருகிறேன்” என்றார்.