விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம்  மற்றும் செட்டிக்குறிச்சி கிராமங்களில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

Continues below advertisement

வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்த குறித்து அமைச்சர் ஆய்வு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விருதுநகர் மாவட்ட  ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, முன்னிலையில், அருப்புக்கோட்டை வட்டம் சிதம்பராபுரம் மற்றும் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள வாழை மரங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் தெரிவித்ததாவது..,” அருப்புக்கோட்டை வட்டம், சிதம்பராபுரம், சின்ன செட்டிக்குறிச்சி மற்றும் பெரிய செட்டிக்குறிச்சி கிராமங்களில் 05.10.2025 மாலை சுமார் 04.00 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்களில், சுமார் 27.5 ஏக்கர் பரப்பளவு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

Continues below advertisement

தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

இதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அதிகாரிகள்  முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் 27.5 ஏக்கர் பரப்பளவு சேதமடைந்துள்ள வாழை மர நிவாரணத்திற்கு அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதிகளில் பயிர்க் காப்பீடு இல்லாத காரணத்தினால் பயிர்க் காப்பீட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் தோட்டக்கலைத்துறை மூலம் எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக பலத்த காற்றினால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி  உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட உள்ளது.

நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மேல் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்  

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் கடந்த ஆண்டு சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து இம்முறை எவ்வித இடர்பாடுகள் ஏற்படாமலிருக்கவும், நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மேல் நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை வட்டாட்சியர், தோட்டக்கலை துணைஇயக்குநர் சுபாவாசுகி, வேளாண்மைத் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அ.அம்சவேணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் அங்கயற்கண்ணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்