புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியங்கள் துறை சார்பில், ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய அருங்காட்சியக கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில், அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
மாவட்ட அருங்காட்சியகங்கள் சிறப்பு
அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசு 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.
விருதுநகர் அருங்காட்சியகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் 10.03.2001 அன்று தோற்றுவிக்கப்பட்டது. தற்சமயம் விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு தொல்லியல், வரலாறு, புவியியல், இயற்கை வரலாறு, மானுடவியல், உயிரியல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் புகைப்படங்கள் எனப் பல்வகை பிரிவுகளைச் சார்ந்த சுமார் 1200 அரும்பொருட்கள் காட்சிக் கூடங்களிலும்(Showcases) அருங்காட்சியக இருப்பிலும் (Reserve Collection) உள்ளன.
புதிய அருங்காட்சியக அமைக்கும் பணிகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகத்தை சொந்தக் கட்டிடத்தில் மாற்றியமைக்கவும், இருப்பில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திடவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய முக்கியமான இடத்தில் அமைக்க வேண்டிய கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு சுமார் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.8 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அருங்காட்சியகத்தில் ஏற்படவுள்ள வசதிகள் இந்த புதிய அருங்காட்சியக கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை, கண்காணிப்பாளர் அறையும், இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டடத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.