2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாற ஆன்மிக பலம் என்பது அவசியம் - வானதி சீனிவாசன்
பழனி கோவிலுக்கு புதிய யானை வாங்கவேண்டும் என்று திமுக அரசுக்கு மனமிருந்தால் மத்திய அரசிடம் பேசி வனத்துறை சட்டத்தின்படி புதிய யானை வாங்க முடியும்.

பழனி கோவிலுக்கு புதிய யானை வாங்கவேண்டும் என்று திமுக அரசுக்கு மனமிருந்தால் மத்திய அரசிடம் பேசி வனத்துறை சட்டத்தின்படி புதிய யானை வாங்க முடியும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது இதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உறவினர்களுடன் கோவையிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வருகை தந்தார். அவருக்கு சண்முகநதியில் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பழனி அடிவாரம் கிரிவீதியில் கிரிவலம் சென்று படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். பிறகு தங்க ரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது,
மலைமீது அமர்ந்து அருள் புரிந்து கொண்டிருக்கும் முருகனின் ஆன்மிக அருளை நாடுமுழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காகவும், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவான 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாற ஆன்மிக பலம் என்பது அவசியம் என்றும், சனாதன தர்மத்தில்தான் எந்த வேறுபாடும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் வாழ வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிற தர்மம் என்றும், அதனடிப்படையில் பிரிவினை இல்லாத சமுதாயத்தை அமைக்க பாஜக பாடுபட்டு கொண்டிருப்பதாகவும், அதற்கு ஆன்மிக பலத்தையும் சேர்க்கும் விதமாக பாதயாத்திரையாக வந்து உள்ளதாக தெரிவித்தார்.
பழனியின் புண்ணியநதியான சண்முகநதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடிவிட்டு கோவிலுக்கு வருவது வழக்கம். நீராட முடியாவிட்டாலும் தீர்த்தத்தை தலையில் நனைத்தாவது செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் சண்முகநதிக் கரையில் ஒரு படித்துறை இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், முருகன் மாநாடு நடத்தி நாங்கள் முருகபக்தர்களோடு இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள முயற்சி செய்ய நாடகம் நடத்தும் திமுக அரசு படித்துறை அமைப்பது பெரிய விஷயமல்ல. எனவே திமுக அரசு சண்முகநதியில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பழனி கோவிலுக்கு புதிய யானை வாங்குவது மத்திய வனவிலங்குகள் சட்டத்தின் படி புதிய யானை வாங்குவதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் பேசவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள கோயில்களுக்கு இன்றும் மத்திய வறவிலங்குகள் சட்டத்தின்படி யானைகள் வாங்கப்படும் போது தமிழக அரசு மனது வைத்தால் மத்திய அரசிடம் பேசி புதிய யானை வாங்க முடியும் என்றும், யானை மற்றும் அதன் பராமரிப்பு என விதிமுறைகள் எது இருந்தாலும் அதை வாங்கிக் கொடுக்க பக்தர்கள் ஏராளமானோர் உள்ளனர். எனவே திமுக அரசு மனது வைத்தால் பழனி கோவிலுக்கு புதிய யானை வாங்க முடியும் என்றும், அதற்கு பாஜகவும் உதவத் தயார் என்றும் தெரிவித்தார். இன்று பாலியல் வன்கொடுமை என்பது கல்லூரி மட்டுமல்ல பள்ளி, கல்வி வளாகங்கள் என அதிகளவில் நடைபெறுகிறது.
இதை தடுக்க சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாஜக பேசி வந்தாலும், திமுக அரசின் கவனமெல்லாம் தமிழக மக்களுக்கு எப்படி வஞ்சனை செய்வது, அவர்களது பாதுகாப்பை எப்படி கவனிக்காமல் விடுவது என்பதிலேயே குறியாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது குடும்ப நலனை கவனிப்பதற்கே நேரம் போதவில்லை என்றும் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும் என்றபோதும் அவர்கள் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது பலி சுமத்துவதாக தெரிவித்தார். தமிழகத்தின் சாலை போக்குவரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. அதேபோல் பழனி-ஈரோடு ரயில் திட்டம் எந்த நிலையில் இருந்தாலும், அதை நிறைவேற்ற பாஜக மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், இதுதொடர்பாக மாவட்ட பாஜக நிர்வாகிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.