தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.




கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்புசி முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் நேற்றிலிருந்து (10.06.2024) முதல் 30.06.2024 வரை 21 நாட்களுக்கு தேனி மாவட்டம் முழுவதும் நடை பெற உள்ளது.


கோமாரி நோய் ஒரு வகையான வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் காய்ச்சல், தீவனம் உட்கொள்ளாத நிலை, பால் உற்பத்தி குறைதல், வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல், வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்தசோகையும் ஏற்படும். இளங்கன்றுகளில் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படும்.




இந்நோயிலிருந்து கால்நடைகளை காக்க, தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த வழியாகும். இதற்கென கல்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை இலவசமாக அனைத்து பசுவினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகள் மற்றும் நிறைமாத சினை இல்லாத 1,01,310 பசு இனங்களுக்கும் 490 எருமை இனங்களுக்கும் தடுப்பூசிப்போட திட்டமிடப்பட்டுள்ளது. 




அதன்படி, ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இப்பகுதியில் உள்ள 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.  கால்நடை வளர்ப்போருக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு கட்டாயம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்