அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகை தந்த  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தனது பெரியப்பாவுமான மு.க.அழகிரியை சந்திக்க மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார்.
 

பின்னர் வெளியே வந்தபோது உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
 
அப்போது பேசிய உதயநிதி "அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்தேன். அழகிரி பெரியப்பாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்துள்ளேன். பெரியப்பா என்னை வாழ்த்தி உள்ளார்கள், நன்றி தெரிவித்துள்ளேன். பெரியப்பா மனநிறைவோடு வாழ்த்தியுள்ளார்.” என்றார். 
 
தொடர்ந்து பேசிய மு.க.அழகிரி “தம்பி மகன் என்கிற முறையில் பெரியப்பாவிடமும் பெரியம்மா இடமும் ஆசீர்வாதமாக வந்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியும் எனக்கு மகன்தான் அப்போது வாழ்த்து தெரிவித்திருந்தேன் தற்போதும் வந்துள்ளார் அவரையும் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளேன்.
 
எல்லை இல்லாத மகிழ்ச்சியில் உள்ளேன். நான் திருநகர் வீட்டிலிருந்த போது எங்கள் வீட்டிற்கு வந்து என் பசங்களுடன் விளையாடியவர் இன்று அமைச்சராக உள்ளார் என்றால் அதைவிட சந்தோசம் எனக்கு என்ன உள்ளது. எனது தம்பி முதல்வராக இவர் அமைச்சராகி உள்ளார். என்னை திமுகவில் இணைப்பார்களா என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார் அழகிரி.