மதுரை மாநாடு: விஜய் தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்! 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு, தேதி மாற்றம் ஏன்? - முழுமையாக படிக்கவும்.
த.வெ.க., மதுரை மாநாடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என சொல்லிருந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஏற்பாடு
எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்த போதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார். இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடத்தப்பட்டது. அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.
தொடர் கண்காணிப்பில் புஸ்ஸி ஆனாந்த்
இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 13 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அவ்வப்போது மதுரைவரும் த.வெ.க., பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கிச் செல்கிறார்.
rampwalk way மேடை
பிரம்மாண்டமாக மாநாடு மேடை, விஜய் நடந்து செல்லும் rampwalk way மேடை, தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு வரும் தொண்டர்களின் வசதிக்கேற்ப குடிநீர் தொட்டிகள் பொருத்தும் பணிகளும் , சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவ பாதுகாப்பு அறைகள், கழிப்பறைகள், ஏற்படுத்தும் பணிகளும் ஒரு புறம் துவங்கியுள்ளது. மாநாடு பகுதிக்கு எதிரே உள்ள 200 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு மாநாடு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு திடலில் பிரம்மாண்ட கொடி கம்பம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் மாநாடன்று விஜய் தவெக கொடியினை ஏற்றுவார் எனவும் கூறப்படுகிறது.