”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா”இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. பாடலுக்கு சொந்தமானவர் இந்தப் பாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை; இந்த ஊருக்கும் சொந்தமானவர். இசைஞானி இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம்தான் அது.
”நாலாபக்கமும் மழை சூழ்திருக்கும் நடுவுல பசுமை பூத்திருக்கும்”
உலகிலேயே நீண்ட மலைத் தொடரான மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ள பசுமை போர்த்திய இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மாவட்டம் தேனி. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைத்தொடர்கள் , சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, குரங்கணி, மேகமலை உள்ளிட்ட பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவத்தை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளது. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதும், எங்கும் பசுமை போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கும்.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது சுருளி அருவி. இந்த அருவி சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. சின்னமனூரிலிருந்து சில கிலோமீட்டர் மலைப் பயணமாக சென்றால் மேகங்கள் கொஞ்சி விளையாடும் மேகமலை உள்ளது. இதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் தற்போது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது கூடுதல் சிறப்பு. இந்த வனப்பகுதி தமிழ் நாட்டின் இரண்டாவது புலிகள் சரணாலயமாக மாறியுள்ளது, அணில்கள் சரணாலயமாகவும் உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தமிழக,கேரளா ஆகிய இரு அரசுகளும் இணைந்து வனத் திருடர்கள் வனக் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்டு வருவது இந்த மாவட்டத்தில் மட்டும்தான். கம்பம் என்றாலே பள்ளத்தாக்கு பகுதி என்று கூறுவர் ஆனால் இது பள்ளத்தாக்கு அல்ல பஞ்சம் தாங்கி ஊர் என்று இதற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெல் விவசாயத்தில் சிறந்து விளங்குகிறது. எப்போதும் குளிர்ந்த காற்று, குளுமையான சூழலை ரசிப்பவர்கள், வெளி ஊரிலிருந்து புதிதாக இங்கு வருபவர்கள் " இந்த க்ளைமேட்டில் இருந்து விட்டு திரும்பி சொந்த ஊருக்குச் செல்ல அவர்களுக்கு மனம் மறுக்கும்" என கூறுவர். உலகத்திலேயே வருடம் முழுவதும் எந்தக் காலச் சூழலுக்கும் ஏற்றவாரு கம்பம் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்புப் பன்னீர் திராட்சையின் சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆதிகாலத்திலிருந்து மனிதன் பயிரிட்டப் பயிர் என திராட்சையை கூறுகிறது பைபிள், இதே போன்று குரானிலும் திராட்சையின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிக்வேதத்தில் இந்த திராட்சையின் பயன் குறித்து குறிப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிகாலத்திலேயே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த சான்றும் தமிழின் பழமையைக் கூற ஆண்டிபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட முவ்வாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுத்தப்பட்டதாக கூறப்படும் புல்லிமான் கோம்பை கல்வெட்டுகள் கிடைத்த இடம் தேனி மாவட்டம். தேனி மாவட்டம் இயற்கைக்கு மட்டும் பேர் போனதல்ல இலக்கியத்திற்கும்தான் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.