10 ஆண்டுக்கு பிறகு மதுரை - தேனி இடையேயான முன்பதிவில்லாத தினசரி பயணிகள் ரயில் சேவை வருகின்ற 27 ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 


கடந்த 1928 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010 ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. 


போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 


இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. 






இந்தநிலையில், மதுரை - தேனி ரயில் சேவை மே 27 முதல் மீண்டும் தொடங்குகிறது. மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை மே 26 ஆம் தேதி பிரதமர்  நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் தொடக்க ரயில் சேவையும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும். வழக்கமான ரயில் சேவை மே 27 முதல் தொடங்கும்.


அதன்படி, மதுரை - தேனி முன்பதிவில்லா விரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்குப் புறப்பட்டு 09.35 மணிக்கு தேனியை சென்றடையும். திரும்பும் திசையில், தேனி - மதுரை முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில் 18.15 மணிக்குப் புறப்பட்டு 19.35 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில்கள் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 பொது இரண்டாம் வகுப்பு மற்றும் ரயில் மேலாளர் மற்றும் லக்கேஜ் வேன்கள் அதிகரிக்கப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண