மதுரை மாவட்டம்  திருநெல்வேலி- விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்தின்  சார்பில் மதுரை கப்பலூர் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக டோல்கேட் தொடங்கப்பட்டது. இந்த டோல்கேட்டால் திருமங்கலம் முதல் பேரையூர் வரை செல்லக்கூடிய உள்ளூர் வாகனங்கள் மற்றும் கப்பலூர் சிப்காட் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லகூடிய வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதால் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.



 இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் நாள்தோறும் டோல்கேட்டில் கட்டண வசூலின்போது அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட  செல்ல முடியாத நிலை நாள்தோறும் தொடர்கிறது.



 

இந்நிலையில் மதுரை கப்பலுார் டோல்கேட் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தியதற்காக அரசு பேருந்துகளுக்கு ரூ. 29.5 கோடி செலுத்த டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது டோல்கேட்டை பயன்படுத்திய மதுரை, திருமங்கலம் டவுன் பஸ்கள் மற்றும் மதுரை - செங்கோட்டை ரோட்டில் 2020 - 22 மே வரை சென்ற அரசு பஸ்களுக்கு மொத்தம் ரூ.29.5 கோடி கட்டணத்தை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 



 

ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அளவுக்கு அதிகமான டோல்கேட் கட்டணத்தை எப்படி செலுத்துவது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். பல முறை போராட்டங்கள் நடத்தியும் உரிய வழிகாட்டுமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் கப்பலூர் டோல்கேட்டை மாற்றுவதற்காக தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.