மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

இயற்கையுடன் இணைந்து இருப்பது என்பது சாமானியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் ஆடம்பரமாகவே உள்ளது. பூங்காக்கள் நகர்புறங்களின் நுரையீரல் போல் செயல்படுகிறது. பூங்காக்கள் நகர் புறங்களில் உள்ள வெப்ப நிலைகளை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது என  நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை நகர் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.

 

மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பூங்கா என 100 வார்டுகளில் 100 பூங்க அமைக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சி பகுதியில் 53 பூங்கா மட்டுமே உள்ளன அவற்றிலும் 25 பூங்கா மட்டுமே செயல்படுகின்றது. சில பூங்காக்கள் முழுமையாக செயல்படவில்லை. சில பூங்காக்களில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. பல பூங்காக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காக்களில் முறையான ஊழியர்கள் நியமித்து பொதுமக்களுக்கு தேவையான, நாற்காலிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி மேம்படுத்த வேண்டும். எனவே, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்து முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 

 

* மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளது. 

 

* மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 16 பூங்காக்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு 19 பூங்காக்கள் கண்டறியப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

* இயற்கையுடன் இணைந்து இருப்பது என்பது சாமானியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் ஆடம்பரமாகவே உள்ளது.

 

* நகர்ப்புற பகுதியில் உள்ள பூங்காக்கள் சாமானியர்களை மீண்டும் இயற்கையுடன் இணைக்கவும், மனதளவிலும், உடலளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது. 

 

* நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுகின்றது.

 

* சாமானிய மக்களின் இதயங்களில் இயற்கையின் மகத்துவத்தை உணரச் செய்கின்றது.

 

* பூங்காக்கள் நகர் புறங்களில் உள்ள வெப்ப நிலைகளை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது. 

 

* பூங்காக்கள் நகர்ப்புறங்களின் நுரையீரலாக  செயல்படுகிறது

 

* பூங்காக்களை பொழுது போக்கிற்கான இடங்களாக பார்ப்பதை காட்டிலும் சுற்றுச்சூழல்  முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.

 

இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பல பூங்காக்களில் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 

மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்தியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் 12 வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.