திண்டுக்கல்லில் 2  மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த  கனமழையால் நகர்புறங்களை சூழ்ந்த மழைநீர்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன்  கழிவுநீர் ஓடை கலப்பதால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 




பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், திண்டுக்கல்லில் காலை  7.00 மணிக்கு சாரல் மலையாக ஆரம்பித்த மழை  2  மணி நேரத்திற்கு மேலாக  கனமழை பெய்தது. திண்டுக்கல், கோபால்பட்டி, சாணார்பட்டி, சின்னாளப்பட்டி  ரெட்டியார்சத்திரம், ஆத்தூர்  ,வேடசந்தூர், நத்தம் பல பகுதிகளில் கன மழை பெய்தது.




காலை முதல் கனமழையில் பெய்ததால் நனைந்தபடி பள்ளி , கல்லூரிகளுக்கு  மாணவ ,மாணவியர்  சென்றனர்.  மேலும் நகர்புறங்களில் மழைநீரானது சூழ்ந்ததால் நகர்புறங்களில் உள்ள கடைகளில் உள்ளே மழை நீர் புகுந்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் கால்வாய் ஓடைகள் கலக்கப்பட்டு செல்வதால்  தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையிலும் பழுதாகி உள்ள நிலையும் ஏற்பட்டு உள்ளது. உடனே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் மழை நீருடன் கால்வாய் ஓடைகள் நீர் கலந்து செல்வதை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிலையில் பழனியிலும் பாலாறு அணை பகுதியில் தொடர் கன மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 




பழனி அருகே மேற்கு தொடர்சி மலையையொட்டி வரதமா நதி அணை ,குதிரையாறு அணை, பாலாறு பொருந்தலாறு என மூன்று  அணைகள் உள்ளது.  பழனி பகுதியில் தொடர்கன மழை பெய்து வருவதால் மூன்று அணைகளும் நிரம்பி வருகிறது. தற்போது பாலாறு பொருந்தலாறு அணையின் முழு கொள்ளளவான 64 அடியையும் எட்டி உள்ளது. அணையின் நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உள்ளது. மேலும் பாலாறு பொருந்தலாறு அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே சண்முக நதி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் பாலாறு பொருந்தலாறு அணை மற்றும் சண்முக நதி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் ,பாதுகாப்புடன்  இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில்  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.