புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி SRMU தொழிற்சங்கத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து டெல்லியில் மத்திய அரசின் அனைத்துதுறை தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் - மக்களின் நலன்கருதி முதற்கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகிறோம் என SRMU பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி.

 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், ரயில்வே தனியார் மயமாக்கலை கண்டித்தும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (SRMU) சார்பில் நேற்று தொடங்கி வரும் 11 ஆம் தேதிவரை 4 நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. 2 ஆவது நாளாக மதுரை மேற்கு நுழைவாயில் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



 

 

அப்போது மத்திய அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் SRMU பொதுச்செயலாளர் கண்ணையா கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறை தொழிற்சங்கத்தின் சார்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 90 சதவிதம் பேர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் முதற்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.



 

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட SRMU பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "2004க்கு முன்பு இருந்தை போன்ற பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் ஆனால் அதனை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசின் அனைத்துத்துறை சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம் அதில் 90 சதவித ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி முதற்கட்டமாக 4 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திகொண்டுவருகிறோம். எங்களது கிரோக்கைமத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.



 

 

நிதியமைச்சர் ஆலோசனைப்படி கமிட்டி அமைத்தோம், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அடுத்தமாதம் டெல்லியில் கூடி முடிவெடுப்போம், மத்திய அரசின் அனைத்து துறை தொழிற்சங்கத்தினரையும் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ப போராட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு போராட்டத்தை அறிவிப்போம் என்றார். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த நிதி இல்லை என கூறுவது ஏற்கதக்கது அல்ல; இதுபோன்று தான் 6ஆவது ஊதியக்குழு அமைக்க முடியாது என நிதியை காரணமாக கூறினார்கள் ஆனால் தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த போராட்டங்களை தொடர்வோம்” என்றார்.