மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைதொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குபதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.
இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து காவல்துறையினர் அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் என்ன உடை அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மதுரையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்