திருப்புத்தூர் திருத்தளி படார்க்கு.. காரைக்குடி மதுரை வழித்தடத்தில் காரைக்குடியிலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இவ்வூர் பல ஊர்களுக்குச் செல்வதற்கு இணைப்பு நகரமாக உள்ளது. தன்னுள் பழம் பெருமையைத் தாங்கி இன்றும் புதிதாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் கல்வெட்டுகளில் இலக்கியங்களில் திருப்புத்தூர் என்று வழங்கினாலும் மக்களின் பேச்சு வழக்கில் திருப்பத்தூர் என்றே வழங்கப்படுகிறது. அதன் சிறப்பு குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் கா.காளிராசா நம்மிடம் விளக்கினார்.

 

 திருத்தளிநாதர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள்.

 

திரும்பும் திசை எங்கும் கல்வெட்டுகள் நிறைந்த கோவிலாக திருத்தளிநாதர் கோவில் காணப்படுகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பாண்டியர், சோழர், விஜயநகரப் பேரரசர், நாயக்கர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

 

 

வட்டெழுத்துக் கல்வெட்டுகள்.

 

கோவிலில் கருவறையின் பின்பகுதியில் உள்ள மரத்தடியில் வட்ட எழுத்து கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. ஒன்று மாறஞ்சடையனுடையதாகவும் மற்றொன்று வரகுணமாராயனுடையதாகவும் அறியப்படுகின்றன. பிற்கால பாண்டியர்களின் 60க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக் கோவிலில் காணப்படுகின்றன. சடையவர்மன் குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் விக்கிரமபாண்டியத்தேவன். ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

 

முதலாம் ராஜராஜசோழனின் கல்வெட்டு.

 

முதலாம் இராஜ இராஜ சோழன் 1013 ஆண்டு காலத்தைய  கல்வெட்டு கருவறை முன் மண்டபத்தின் அதிட்டாணப்  பகுதியில் காணப்படுகிறது. அதன் கீழ் பகுதியில் வீர ராஜேந்திரன் கல்வெட்டு இராஜா கேசரி வர்மா என்று குறிப்பிடப்படுகிறது. இவன் முதல் ராஜேந்திர சோழனின் மகன் ஆவான். திருப்பத்தூரில் உள்ள கல்வெட்டில் இவன் தந்தை கங்கை, கடாரம், பூர்வதேசம் முதலியயனவற்றை வென்றதை குறிப்பிடுகிறது.

.

விஜயநகர மன்னர்கள்.

 

இம்மடி நரசிம்ம மாத்ராயன் 1499.காலத்தைச்சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. விஜயநகர பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கல்வெட்டுகள் மூன்று காணப்படுகின்றன, இதன் காலம் கி.பி 1510- 1518. கிருஷ்ணதேவராயரின் தம்பி வீரப்பிரதாப அச்சுத தேவராயர் 1530, 1535, 1538 ஆகிய ஆண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அழகம்பெருமாள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மைத்துனர். கல்வெட்டு ஒன்றும் இங்கு காணக் கிடைக்கிறது.விஜய இரகுநாத நாயக்கர், தும்பிச்சி நாயக்கர், வெண்கலப்ப நாயக்க வீர நரசிம்ம ரான செல்லப்பன், பெரிய ராமப்பன் ஆகியோரது கல்வெட்டு களும் காணக் கிடைக்கின்றன. முகமதியர் படையெடுப்பில் திருப்புத்தூர் கோவிலும் கைப்பற்றப்பட்டது. முகமதியர் அங்கு தங்கி கோவிலை பாழ்படுத்தினர். திருப்புத்தூர் மக்கள் ஊரை விட்டு வெளியேறினர். இச்சமயத்தில் விசையாலயத்தேவன் கோவிலைப் புதுப்பித்து கோவிலில் தெய்வ உருவங்களை மீண்டும்  நிறுவினான். இச்செய்திகளை திருப்பத்தூர் கோவிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதுலையூர் நாட்டுத் தேனாற்றுப் போக்கு சூரைக்குடி அவையான பெரிய நாயனாரான விசயாலயத் தேவன், என்று   குறிப்பிடுகின்றன‌.

 

கல்வெட்டுகளில் முகமதியர் யவனர் என்று குறிக்கப்படுகின்றனர்.

 

விஜய இரகுநாத நாயக்கர், தும்பிச்சி நாயக்கர், வெண்கலப்ப நாயக்க வீர நரசிம்ம ரான செல்லப்பன், பெரிய ராமப்பன் ஆகியோரது கல்வெட்டு களும் காணக் கிடைக்கின்றன.

 

கொழுவூர் கூற்றம்.

 

கொழுவூர் கூற்றம் என்பது  சோழர்கள் காலத்தில் கேரள சிங்கவள நாடு, என அழைக்கப்பட்ட போதிலும் கல்வெட்டில் பிரம்மதேயம் என்பதும் திருப்புத்தூர் என்பதும் மாறாமல் இடம்பெற்றுள்ளன.கல்வெட்டுகளில் குறிக்கப்படும் திருக்கொடுங்குன்றம் பிரான்மலை எனவும்,  நியமம் நேமம் எனவும் காரையூர், நெடுமரம், அழகாபுரி, சதுர்வேதிமங்களம், திருக்கோட்டியூர், திருப்புவனம், சிறுவயல், பொன்னமராவதி, கூத்தலூர் ஆகிய ஊர்கள் எவ்வித மாற்றம் இல்லாமல் இன்றும் அப்பெயரிலே வழங்கப்படுகின்றன.கி.பி12ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இருந்து பைரவர்  ஆண்ட பிள்ளை யார் என்று குறிப்பிடப்படுகிறார்.

சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் காரையூர்க்கிழார் மகன்கள் மற்றும் மருமக்கள் சேர்ந்து அந்தணர்களைக் கொன்றனர். கொன்றவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அதை 500 சோழியன் காசுக்கு விற்று திருத்தளி நாதர் கோயிலுக்கு செலுத்த தீர்ப்பு வழங்கிய செய்தி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.

 

செப்புத் திருமேனிகள்.

 

முற்கால பாண்டியர்கள் செப்புத் திருமேனிகள் உள்ளன, இதில் பத்தாம் நூற்றாண்டு ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய உருவங்கள் குறிப்பிடத்தக்கன. பூமாயி அம்மன் கோயில் என்ற பிடாரி கோவில் திருவிழாவிற்கு காளி செப்புத் திருமேனி இங்கிருந்தே 10 நாள்களும் கொண்டு செல்லப்படுகிறது. திருத்தளிநாதர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஸ்ரீ வல்லவ பாண்டியன் பட்டத்தரசி உலகம் முழுதும் உடையாள் என்று குறிப்பிடப்படுகிறது, இதைக் கொண்டு இத்திருச் சுற்று 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

 

நவகண்டம்

 

போரில் தன் தலைவன் வெற்றி பெற காளிக்கு முன்னால் தன் வேண்டுதல் நிறைவேறிய பின் தன் தலையை தானே வெட்டிக் கொள்ளும் முறையை தலைப்பலி என்கிறோம். மேலும் 9 இடங்களில் வெட்டிக்கொண்டு உயிர் விடுவதை நவகண்டம் என்கிறோம். அவ்வறாக இங்கே நவகண்ட சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

 

 

மருது பாண்டியர்களும் திருப்பத்தூரும்.

 

மருது பாண்டியர்கள் திருப்பத்தூர் கோவிலில் பைரவர் சன்னதிக்கு முன் மண்டபங்களை எழுப்பி அவர்களது திருவுருச்சிலையையும்  நிறுவியுள்ளனர்.

 

கண்மாய் பராமரிப்பு.

 

திருப்பத்தூரில் நீர்வளம் பெருக மக்கள் எப்போதும் தண்ணீருக்கு கடினப்படாமல் வேளாண்மை செய்யவதற்காக  தென்மாப்பட்டு மற்றும் திருப்பத்தூர் பெரிய கண்மாய்களை வெட்டி பராமரிப்பு செய்து கொடுத்துள்ளனர். மேலும் இவ்வூரைச் சுற்றி பெரிய கிணறுகளை அமைத்துக் கொடுத்தனர். அக்கிணறுகள் காராளர்கேணிகள் என்று வழங்கப்படுகின்றன. இங்கிருந்த கோட்டையைக் கைப்பற்ற நவாப்பிற்கும் மருதுபாண்டியருக்கும் இடையே நடைபெற்ற போரில் மாறி மாறி வெற்றி பெற்று கோட்டையை  தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

 

இறுதியாகக்கோட்டை நவாப் மற்றும் கிழக்கு இந்திய கம்பெனியரிடம் வந்தது. 

 

கோட்டையின் தென்மேற்கு மூலையில் மருது பாண்டியர்கள் கருத்தத்தம்பி, மொல்லிக்குட்டித்தம்பி சின்ன மருது மக்கள் சிவஞானம்,சிவத்தம்பி அவரது மகன் முத்துச்சாமி ஆகியோரும் ஒரு சேர தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட இடம் திருப்பத்தூரே ஆகும். ஆங்கிலேயர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் சண்டை நடந்த போது அவர்கள் மறைந்து வாழ்ந்த பகுதிகளில் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு ஓலையால் எழுதிக் கொடுத்தனர். அவர்களுக்கு பின்னாளில் நிலக்கொடைகள் வழங்கப்பட்டன இவ்வாறாக திருப்பத்தூர் அருகே உள்ள பழஞ்சோற்று குருநாதனேந்தல் மற்றும் பனியாரனேந்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 

அக்க சாலை.

 

தென்மா பட்டு பகுதியில் அக்கசாலை விநாயகர் என்ற பெயரில் விநாயகர் வழிபாட்டில் உள்ளார். இதனைக் கொண்டு இங்கு நாணய சாலை ஒன்று இருந்திருக்கலாம்  மேலும் வளையல் காரத் தெரு சுண்ணாம்புக் காரத் தெரு போன்றவையும் இடம் பெற்று இருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிருந்து நாயக்கர் ஆட்சி செய்த பகுதியாகவும் கருதலாம்.

 

கடவுளின் முன் அனைவரும் சமம்.

 

இங்குள்ள  தெம்பாபட்டில் பட்டியல் இனத்தவர் சாமியாடிகளாகவும் மற்ற இனத்தவர்கள் அவர்கள் காலில் நீருற்றி வணங்கி திருநீறு வாங்குவதையும் இன்றைய திருவிழாக்களிலும் காண முடிகிறது. இது கடவுளின் முன்  அனைவரும் சமம் என்றும் எங்களிடம் எந்த பாகுபாடும் இல்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது.