நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த விவகார வழக்கு விசாரணையை தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமை காரணமாக சுப்புலட்சுமி, இசக்கிமுத்து அவரது குழந்தைகள் இருவர் என 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட முத்துலட்சுமி, தளவாய் ராஜ், காளி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் முன்பாக நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஆஜராவதில்லை.  சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் உள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை  தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். வழக்கில் குற்றவாளிகள் ஆஜராகாமல் தாமதித்தால், வாரண்ட் அனுப்பி ஆஜராகச்செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்


 




மற்றொரு வழக்கு


மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாயை 6% வட்டியுடன்,   12 வாரங்களுக்குள்  வழங்க தமிழ்நாடு மின்வாரியத்திற்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


திருச்சியை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்"எனது கணவர் பழனிசாமி விவசாயம் செய்வதற்காக எங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மின் கம்பத்துடன் கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டிருந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக கேபிள் வயர் அறுந்துள்ளது. கேபிள் டிவியின் வயர், விவசாயப் பணிகளை கவனிக்கச் சென்ற எனது கணவரின் தலையில் பட்டதில் சம்பவ இடத்திலேயே எனது கணவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், மின்சாரம் தாக்கி தான் அசர் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் மட்டுமே எங்களது குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபராக இருந்த நிலையில், தற்பொழுது எனது கணவர் இறப்புக்குப் பிறகு நானும் எனது பிள்ளைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த எனது கணவரின் மரணத்திற்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மின் கம்பத்துடன் சட்டவிரோதமாக கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டு இருந்ததை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது. அந்நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். எனவே மனுதாரருக்கு 9, லட்சத்து 7 ஆயிரத்து 104 ரூபாயை, 12.6.2006  முதல் தற்பொழுது வரை ஆண்டுக்கு 6% வட்டியுடன் இணைத்து 12 வாரத்திற்குள் வழங்க தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண