திருநெல்வேலி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கியதால் உயிரிழந்த கணவரின் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இசக்கி சங்கரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் எனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று தாழையூத்து பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது காவல்துறை குழுவினருடன் எங்கள் வீடு புகுந்து எனது கணவர் முருகேசன் மற்றும் அவரது நண்பர் மாணிக்க ராஜ் கொடூரமாக தாக்கி அங்கிருந்து சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிவந்திப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது காவல்துறை துணை கண்காணிப்பாளர் கொடூரமாக எனது கணவர் மற்றும் அவரது நண்பரை தாக்கி கொண்டிருந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து எனது கணவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 31.3.2018 அன்று உயிரிழந்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கானது 2018 ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 4 வருட காலம் ஆகியும் சிபிசிஐடி விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. எனவே, எனது கணவரின் வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி,மரணம் குறித்து விசாரணை செய்த நீதிமன்ற நடுவர் அறிக்கையை தாக்கல் செய்யவும், சிபிசிஐடி தரப்பில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் மற்றும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்