கடந்த 2018 ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பிரவீன் குமாரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). இதே பகுதியைச் சேர்ந்தவர் சைக்கோ கண்ணன் (24). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார் முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.


இந்தநிலையில் அதே ஆண்டில் அங்குள்ள கோவிலில் பிரவீன் குமார் இருந்தார். அங்கு சென்ற சைக்கோ கண்ணன், தனது நண்பர்கள் அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.


இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து 4 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தீர்ப்பளித்தார்.




 



மற்றொரு வழக்கு

 

புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


 

புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த தன விமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிளக்கின் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் வரைவோலையாக எடுத்து விண்ணப்பித்தேன். ஆனால், தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்த நெம்மக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் 20% கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டரை அவருக்காக ஒதுக்கவிருப்பதாக தெரியவருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட ஐந்து சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரூ1.48 கோடி மதிப்பிலான புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண