வழக்கமாக நடக்கும் வாகன சோதனையின்போது, சிலர் தலைக்கவசம் அணியாமல் வந்து திருதிருவென முழிப்பதுண்டு, முகக்கவசம் அணியாதவர்களும் போலீசாரை கண்டு அச்சமடைந்து அவர்களிடம் சிக்காமலிருக்க வந்த பாதையிலேயே திரும்பிச் செல்வதையும் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஓட்டிவரும் இருசக்கர வாகனத்திற்கு லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ்  உள்ளிட்ட ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பி இல்லாமல் கூட போலீசாரிடம் விழிபிதுங்கி நிற்பதும் வாடிக்கை. ஆனால் காய்கறி வாங்கும் கூடை பையில் சர்வசாதாரணமாக 3 நாட்டு வெடிகுண்டுகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 3 இளைஞர்கள் போலீசார் நடத்திய  வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ராமநாதபுரத்தில், நேற்று மாலை  வழக்கமாக நடைபெற்ற வாகன சோதனையின்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் மறித்தனர். ஆனால்,  இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்செல்ல நினைத்து தாறுமாறாக வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து விறுவிறுப்பாக செயல்பட்ட  போலீசார், நிற்காமல் வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து விரட்டிச்  சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் ராமநாதபுரம் நாகநாதபுரம் புதுத்தெரு பகுதியில் உள்ள வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.  அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.




இதனால் அவர்களின் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்த முகம்மது மீராசா மகன்கள் நியாஸ்கான் (40), முகம்மது ரிபாயுன் (38), முகம்மது ஜகாங்கீர் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நியாஸ்கான் பெங்களுருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜகாங்கீர் சென்னை மண்ணடி பகுதியில் ஜூஸ்கடை நடத்தி வருகிறார். ரிபாயுன் ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் வந்து 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், ராமநாதபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.


ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் எதார்த்தமான முறையில் வழக்கம்போல் நடத்திய  சோதனையில், நாட்டு வெடிகுண்டுகளை சகோதரர்கள் மூன்று பேர்  கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வெடிகுண்டுகளை இவர்கள் எதற்காக கொண்டு சென்றனர் இது எங்கு தயாரிக்கப்பட்டது. வேறேதும் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா  என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இன்று மாலை கேணிக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய  முயன்றுள்ளனர். ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த  3 நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்று உள்ளனர். இதையடுத்து  போலீசார் வேகமாக சென்ற இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மறித்து விசாரணையில் ஈடுபட்டு அவர்கள்  வந்த இருசக்கர வாகன சோதனை செய்தபோது அதில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சின்னக்கடை நடுத்தெருவில் சேர்ந்த ரியாஸ்கான், முகமது ரிபாயின், முகமது ஜஹாங்கீர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.