திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில், அனுசியாதேவிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 10ம் தேதி நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இது குறித்து சிந்துபட்டி போலீசார், ஆலை உரிமையாளர் அனுசியாதேவி, கணவர் வெள்ளையன், ஆலை மேற்பார்வையாளர் பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி வெள்ளையன் மற்றும் பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அழகுசிறை ஆலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. வருவாய்துறை விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வேலை வாங்கித் தருவதாக 31 பேரிடம் ரூ.54.75 லட்சம் வசூலித்து உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் பாலாஜி மோசடி செய்தார். இவரின் மனைவி மஞ்சுளா முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அலுவலக உதவியாளராக இருந்த பாலாஜி அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளார்.
பணம் பெற்றவர்களுக்கு போலியாக பணி நியமன ஆணைகளும் வழங்கியுள்ளார்.சுமார் 31 பேரிடம் ரூ.54.75 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர் பாலாஜி, இவருக்கு உதவிய சுரேஷ், ஞானசேகர், மாமனார் ராஜேந்திரன், மாமியார் பேரி, மனைவி மஞ்சுளா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி பாலாஜியின் மனைவி மஞ்சுளா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.