மதுரை ரயில் நிலையத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அவ்விடத்தில் வைக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் அமைந்துள்ளது.
மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்தது அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்தில் வெளியே 1999 ஆண்டு 3 மீன்கள் கொண்ட சிலை 15 அடி உயரம் 3 டன்கள் எடையில் அமைந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை ரயில் நிலையத்தை புதுப்பித்து சீரமைப்பதற்காக மீன் சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி கம்பங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு வேலைகள் முடிவடைந்தது இருந்தும் மீன்கள் சிலை வைக்கப்படவில்லை. பின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் நவம்பர் 2021 ஆம் ஆண்டு ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்து மீன் சிலை மீண்டும் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மீன்கள் சிலை மதுரை ரயில் நிலையம் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தமிழ் சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களை நினைவு கூறும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அவ்விடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள வில்லனியாபுரம் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்க கோரிய வழக்கில்,
வில்லனியாபுரம் கிராமத்திற்கு குடிநீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்ட திட்ட முன்வடிவு மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுசிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள வில்லனியாபுரம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரும்பாலும் விவசாய தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். வில்லனியாபுரம் கிராமத்திற்கு அருகில் குடிநீர் தேவைக்காக மேல்நிலை தொட்டியும் உள்ளது. இருந்தும் கடந்த ஒரு வருடமாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. தற்போது கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் முழுமையாக இல்லை.
இதனால், வில்லனியாபுரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள வில்லனியாபுரம் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், வில்லனியாபுரம் கிராமத்திற்கு குடிநீர் வழங்குவது குறித்த திட்ட முன்வடிவு அனுப்பப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வில்லனியாபுரம் கிராமத்திற்கு குடிநீர் வழங்குவது குறித்து பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்ட திட்ட முன்வடிவு மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.