தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் இருந்து வந்தது. இந்த காட்டு யானை தேவாரம் மற்றும் போடி இடையிலான வனப் பகுதிகளின் அருகே உள்ள விளைநிலங்களில் விளை பயிர்களை சேதப்படுத்தியும், குடிசை மற்றும் வீடுகளை சேதப்படுத்தியும் வந்தது . அதே நேரத்தில் இந்த ஒற்றை யானை மனிதர்களையும் தாக்கியது. தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுறங்களை சேர்ந்த 11 நபர்கள் இந்த காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் .
இந்த காட்டு யானையை பிடிப்பதற்கு இப்பகுதி மக்கள் வனத்துறையிடம் பல மாதங்களாகவே தொடர் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் இந்த காட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறை சார்பாக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, இந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் யானையை பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தனர் வனத்துறையினர் . மேலும் இந்த காட்டு யானையின் அட்டகாசம் அப்பகுதியில் தொடர்ந்து வந்த நிலையில் இன்று காலையில் தேவாரம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து யானை இறந்து கிடந்த இடத்திற்கு சென்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து கிடந்த யானையின் உடல் மீது எந்த காயமும் இல்லை. அதே போல யானை தாக்கப்பட்டதற்க்கான எந்த அடையாளமும் இல்லாத நிலையில், யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது வனத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காட்டு யானை கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மலையடிவாரங்களில் சுற்றித்திரிந்ததை பார்த்த விவசாயிகள் யானை சென்ற நடைபாதைகளில் ரத்த கசிவுடன் யானை கழிவுகள் இருந்துள்ளதாக வனத்துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் இறந்த யானை நோய்வாய்பட்டு இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் எண்ணினர். முதலாவதாக யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என்றனர் வனத்துறையினர். இந்த உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே யானையின் இறப்பு குறித்து முழு தகவல் அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேவாரம் பகுதியில் இது வரையில் 11 நபர்களை கொன்ற காட்டு யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அதே வேலையில் இது போன்ற காட்டு யானைகள் இறப்பு என்பது வனப்பகுதிகள் அழிவுக்கு வழிவகையாக இருக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!