தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுருளி அருவி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கிய இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது, ஆனால் சுருளி அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் தற்போது வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாமல் உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் நாடு முழுவதும் பல்வேறு அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் என கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் கடுமையான மழை பொழிவு கடந்த சில நாட்களாக இருந்து வந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் தூவானம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடுமையான தொடர் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் போல் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று காலையில் இருந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து வரும் வனப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் எதிரொலியாக சுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் ஊரடங்கு விதிமுறைகளில் மூடப்பட்ட சுருளி அருவியை தற்போது வரை சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லாமல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்