தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பழனிசாமி என்ற முஸ்தபா மகன் சக்திவேல் (28). இவர், அதே ஊரில் உள்ள சுப்பையன் என்பவரின் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சக்திவேல், அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோருடன் மதுபானம் வாங்கிவிட்டு தோட்டத்தில் மதுகுடிக்க சென்றார். தோட்டத்துக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (69) வந்து கொண்டிருந்தார். சக்திவேல் உள்பட 3 பேரும், செல்லத்துரையை மது குடிக்க அழைத்தனர். அவரும், அவர்களுடன் மது குடிக்கச் சென்றார்.



தோட்டத்துக்கு சென்றதும் செல்லத்துரைக்கு கொடுக்காமல் மற்ற 3 பேரும் மது குடித்தனர். இது செல்லத்துரைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை அழைத்து வந்து மது கொடுக்காமல் இருப்பது குறித்து அவர் கேட்டார். அப்போது சக்திவேல் அவரை கேலி செய்து கையால் தாக்கினார். பின்னர், கருப்பசாமியை மீண்டும் மதுபானம் வாங்கி வருமாறு சக்திவேல் அனுப்பி வைத்தார். இதனால், கோபம் அடைந்த செல்லத்துரை அங்கிருந்து பழனிசாமியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம், சக்திவேல் தன்னை அவமானப்படுத்தியதால் அவனை கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.



செல்லத்துரையால் தனது மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எண்ணிய பழனிசாமி, தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்துக்கு சென்றார்.  அப்போது தோட்டத்தில் தனியாக இருந்த சக்திவேலை, செல்லத்துரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தார். அதை பார்த்து பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். தனது மகனை காப்பாற்ற ஓடினார். அப்போது செல்லத்துரை அரிவாளை காட்டி அவரையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஊருக்குள் ஓடி வந்தார். இதையடுத்து சக்திவேலை வெட்டி செல்லத்துரை படுகொலை செய்தார்.



பின்னர் சக்திவேலின் தலையை தனியாக துண்டித்து எடுத்து ஒரு பையில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்தார். அங்கு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பையில் எடுத்து வந்த சக்திவேலின் தலையை அங்கு வீசினார். அதைப் பார்த்து கிருஷ்ணன் அங்கிருந்து பதறியடித்து ஓடினார்.  இந்த சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் பழனிசாமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.


பின்னர் அவர் மீது, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து செல்லத்துரையை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண