தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு ஆறு நகராட்சிகளிலும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் அல்லிநகரம் நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டி அதிகமாக இருந்த நிலையில் தேனி நகராட்சி ஆண்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து திமுக நகர செயலாளர் சூர்யா பாலமுருகன் நகர்மன்ற பதவிக்கு போட்டியிடுவதற்காக பல்வேறு வேலைகளை செய்து வந்தார். சூர்யா பாலமுருகன் தேர்தல் நடப்பதற்கு முன்பாக ஒருவரிடம் இடம் மாறுதலுக்காக பணம் கேட்டு பேசிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து தனது மனைவியை ரேணுப்ரியாவை ராஜினாமா செய்ய வைத்து தேனி நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக மாற்றி உள்ளார்.




மேலும் தேனி அல்லி நகரம் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்காக உள்ளூர் திமுகவினர் பலர் கச்சை கட்டிய நிலையில் ’’வைட்டமின் ப’’ - அதிகம் இருந்ததால் சூர்யா பாலமுருகன் இதில் முந்தியதாக கூறப்படுகிறது.  அல்லி நகர நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு சூர்யா பாலமுருகன் 20 ஆவது வார்டிலும் அவரது மனைவி ரேணுப்ரியா 10வது வார்டில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றனர். தேனி-அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் அதிமுக 7, காங்கிரஸ் 2, பாஜக 1 , திமுக 19 வார்டுகளில் வெற்றி பெற்றது.




இந்தநிலையில் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தேனி அல்லிநகரம் காங்கிரஸ் கட்சிக்கு நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நகர்மன்ற தலைவர் பதவிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சியில் 22 ஆவது வார்டில் போட்டியிட்ட சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு கொண்டிருந்த பாலமுருகன் அதிர்ச்சி அடைந்த நிலையில் சற்குணம் தரப்பினரும் நகராட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.




69 வயது நிரம்பிய காங்கிரஸ் கவுன்சிலர் அதற்கு உடன்பாடு இல்லை என கூறிய நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்புமனு தாக்கல் செய்ய விருந்த நிலையில் 10வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரேணுப்ரியா பாலமுருகன் மனு தாக்கல் செய்தார். நடந்த மறைமுக தேர்தலை புறக்கணித்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். மேலும் கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.




இதற்கிடையே திமுக கட்சி தலைமை அறிவித்த இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்று வந்த நிலையிலும் அதனை ராஜினாமா செய்யத் தொடங்கினர். ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் திமுகவினர் தங்கள் பதவியை விட்டுக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேனி-அல்லிநகரம் நகராட்சியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ரேணுப்பிரியா ராஜினாமா செய்யாமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருகிறார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண