தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 6வது நாளாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து முற்றிலும் குளிர்ந்த சூழல் நிலவியுள்ளது.

Continues below advertisement

கத்தரி வெயில் துவக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில், திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்டத்தில் வெயிலின் அளவு சுமார் 105 டிகிரி வரை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில்  கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய துவங்கியது.

Continues below advertisement

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை

கடந்த 3 மாத காலமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததோடு வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக  மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.

தேனி மாவட்டத்தில் குறிப்பாக ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்  தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளையொட்டியுள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக  பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்துள்ளது.  6வது நாளாக பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும்  பெரியகுளத்தை சுற்றியுள்ள லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாசப்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், வடபுதுப்பட்டி, மதுராபுரி, தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி, மஞ்சளார் அணை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்  பிற்பகல் 2  மணி முதல் பலத்த காற்று  கூடிய கனமழை பெய்ய துவங்கியது.

அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 6 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் கோடையில் இரண்டாம் போகம் நெல் நடவு செய்த விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.