தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன். இவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஆதரவாக புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கடந்த 14-01-2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் தனக்கு வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 14.01.2025 அன்று தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து வழக்கறிஞர் பாண்டியராஜனுக்கு சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டது.
இதில் தனது கட்சிக்காரருடன் தான் சென்று புகார் அளித்ததை நிரூபிப்பதற்காக அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ குறித்து விசாரித்ததில், சம்பந்தப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவது மகன் ரமேஷ் என்பதும், அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்ததும் தெரிய வந்தது. இந்த சிசிடிவி காட்சிகளில் ரமேஷ் ஒவ்வொரு காவலர்கள் மீதும் காலில் விழுந்து தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் போதும்,காவல் ஆய்வாளர் அபுதல்கா உள்ளிட்ட அனைத்து காவல் துறையினரும் அவரை மாறி, மாறி ஷூவால் மிதித்து தாக்கியதும்,மேலும் சரமாரியாக மாறி மாறி அவர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்பு மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் இந்த சிசிடிவி வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரமேஷ் என்ற லெப்ட் சின்னசாமி தெற்கு தெரு தேவதானப்பட்டி என்பவர் கடந்த 14.1.2025-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் தேவதானப்பட்டி அரிசி கடை பேருந்து நிறுத்தம் முறையில் பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கல் விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, ரமேஷ் என்பவர் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இடையூறு செய்ததாகவும் மிகுந்த குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தவரை பிடிக்க முயன்ற போது காவலர்களுடன் ரமேஷ் பிரச்சனை செய்த நிலையில், அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் போது குடிபோதையில் இருந்த நபர் ரமேஷ் என்பவரை ஆய்வாளர் மற்றும் உடன் பணிபுரிந்த காவலர்கள் அவரை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இதனால் ரமேஷ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய வழக்குப்பதிவு செய்யப்பட்டது குடிபோதையில் இருந்தவரை கட்டுப்படுத்த முயற்சித்த போது அதிகப்படியான பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு புகார் கொடுக்கப்படவில்லை மேலும் இது சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ரமேஷ் என்பவரை தாக்கியது சம்பந்தமாக பரப்பப்பட்டு வரும் வீடியோ குறித்து மேற்கூறிய விளக்கம் இந்த அறிவிப்பின் மூலம் தெரியப்படுத்தப்படுவதாக மேலும் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை சார்பாக தெரியப்படுத்தப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.