தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் மதுரையில் வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதமாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பதும் அணையில் இருந்து வினாடிக்கு 3,600 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மேலும் வைகை அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும் பட்சத்தில் உபரிநீரை அதிகமாக ஆற்றில் திறக்காமல் பாசனக்கால்வாய் வழியாக திறக்கவும் திட்டமிடப்பட்டது. எதிர்பார்த்தவாறு வைகை அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது இந்த நிலையில் அணையிலிருந்து மதுரை மற்றும் திருமங்கலம் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களான 1,05,002 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திறக்க அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் பாசன பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 85,563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பளவாகிய 19,439 ஏக்கர் நிலங்கள் என மொத்தமாக 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,130 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பாசனத்திற்காக நீர் திறப்பு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பாசனத்திற்கான நீரை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் இந்த நீர் திறப்பு நிகழ்ச்சியில் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். வைகை அணையில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரானது ஆயிரத்து 130 கன அடி வீதம் 45 நாட்களுக்கும் பின்னர் உள்ள 75 நாட்களுக்கு முறை பாசனம் மூலம் மொத்தம் 120 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்பொழுது அணையில் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 70.60 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அணைக்கு நீர்வரத்து 2816 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பிற்கு பின் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தபோது, பெரியார் ஒரு போக பாசன விவசாயிகள் திறந்து விடப்பட்டுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்