கார்த்திகை தீபத்திருநாளன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் ஆட்சியர் அலுவலகம் முன் செய்தியாளர்களை சந்தித்தார். சந்தித்து அவர் பேசுகையில், “இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலை தங்கள் கோயிலாக நினைத்து ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றுகின்றனர்.
ஓ பன்னீர்செல்வத்தின் மகன் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு அங்கீகாரம் இல்லை. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்ததால் அவரது அதிகாரத்தை கையில் எடுத்து தொட்டிய நாயக்கர் எனப்படும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்துள்ளனர்.
இந்த ஆண்டுதான் அந்த மக்களுக்கு மரியாதை கொடுத்து தீபம் ஏற்ற அனுமதித்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஒரு கிரிமினல் குற்றவாளி. அந்த கோயில் பூசாரி தற்கொலைக்கு காரணம் ஓ.ராஜா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவரது பையனுக்கு திருப்பரங்குன்றம் ராஜபட்டர் பரிவட்டம் கட்டி அழைத்து வருகிறார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் அருகில் இருக்கிறார். அவருக்கு பரிவட்டம் கட்ட வேண்டுமா கூடாதா? சமூக நீதி எங்கே? இது அரசு கோயில்.
அதில் அவர்களது சொந்த கோயில் போல பல அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கோயிலை முழுமையாக கையகப்படுத்த நினைத்ததை நாங்கள் தடுத்தோம். ஓ.பன்னீர்செல்வம் மகன் கூறுவதைப் போல ரவுடிகளை கூட்டி வந்திருந்தால் தீபத்தை நாங்களே ஏற்றி இருப்போம். அந்த குருக்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் கொண்டு வரும் தீபத்தை ஏற்றுவதற்காக 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தார்.
அந்த தீபத்தை நீங்கள் ஏற்றுங்கள் என்று குருக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் பலமுறை சொல்கிறார். அதை அவர் கேட்க மறுத்ததால்தான் சமூக நீதி மறுப்பு என்கிறோம். எம்.எல்.ஏ சரவணகுமார், சரிசமமான சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அந்த கோயிலில் சமூக நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நிர்வகிக்கிற இந்த தமிழகத்தில் ஒரு சமூக நீதி மறுப்பு நிகழக்கூடாது என்பதால் தான் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுகின்றோம். நிச்சயமாக அந்த கோயில் ஒரு குடும்பத்தினர் கோயில் என்று இல்லாமல் பொதுக் கோயிலாக மாறும் பொதுமக்கள் தாராளமாக சென்று தரிசனம் செய்யும் நிலைமையை உருவாக்குவோம்.
திமுக ஆட்சி நடக்கிறது என்பதை மறந்து விட்டு, அரசு நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். கோயில் பூசாரியின் வேஷ்டியை சட்டமன்ற உறுப்பினர் பிடித்து இழுத்ததாக கூறுவது தவறான செய்தி. இந்த கோயிலின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரையும் பணி மாறுதல் செய்ய வேண்டும்.
ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் அந்த கோயிலுக்குள் வராமல் தடுக்க முடியும். இந்த கோரிக்கையும் ஆட்சியரின் முன்வைத்துள்ளோம். அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க சொல்லி நானும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் சரவணகுமாரும் மனு கொடுத்துள்ளோம். இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம் என ஆட்சியர் உறுதி அளித்திருக்கிறார்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்