சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது சட்டத்துக்குப் புறம்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது எனக் கூறி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது சிலர் அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். மேலும், அவர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர் ஆக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோசங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே பிளவு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் , இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே போஸ்டர் மோதல், சமூகவளைதல கருத்து மோதல் என அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் இபிஎஸ்க்கு ஆதரவளிப்பதாக முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த ஜக்கையன் தலைமையில் சிலர் சென்னை சென்று இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று, தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தலைமையில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த இபிஎஸ்சின் ஆதரவாளர்களை ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் ஊருக்குள் விடாமலும், கூட்டத்திற்கு செல்லக்கூடாது எனவும் இருதரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கருத்து மோதல் இறுதியில் தள்ளு முள்ளாக மாறியது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் ஆலோசனை கூட்டமானது தொடங்கியது.
இந்த கூட்டத்தில் ஆண்டிபட்டி அதிமுகவை சேர்ந்த பேரூராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நின்று இபிஎஸ் ஒழிக, கொடநாடு வழக்கின் கொலைகாரா ஒழிக என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வால் இரு தரப்பினர் இடையே சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு பின்பு தொடர்ந்து ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது புதிதாக இபிஎஸ் ஆதரவாளர்களாக இணைந்த ஆண்டிபட்டியை சேர்ந்த பேரூராட்சி கழகத்தின் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேசினர் .
இந்த கூட்டத்தில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜக்கையன் பேசுகையில், அதிமுக கழகத்தை வழி நடத்துவதற்கு ஒற்றை தலைமையே வேண்டும். அந்த ஒற்றை தலைமையானது ஈபிஎஸ் அவர்களிடமே உள்ளது. எனவும் அதிமுகவை சேர்ந்த அனைத்து தொண்டர்களும் இபிஎஸ்சை ஒற்றை தலைமை ஏற்க விரும்புவதாகவும் தற்போது இருக்கும் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கட்சியாக எதிர்ப்பதற்கு ஒற்றை தலைமை கொண்ட இபிஎஸ் தலைமையிலான அதிமுகவே தேவை எனவும் பேசினார். மேலும் தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஒற்றை தலைமையை வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியை தலைமை ஏற்க மேலும் அவரை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அடுத்து வரும் நகர்வுகளில் அதிமுக ஒற்றை தலைமையோடு இபிஎஸ் தலைமையில் செயல்படும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்