தேனி மாவட்டம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது இயற்கையும், விவசாயமும்தான். தேனி மாவட்டத்தில்  நெல், வாழை, தென்னை, திராட்சை, கரும்பு போன்றவை அதிகப்படியாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக நெல் விவசாயம் தேனி மாவட்டத்தை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய விவசாயமாக பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் நெல் விவசாயம் அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போதைய சூழலில் நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என தெரிவித்து வருகின்றனர் ஆண்டிப்பட்டி விவசாயிகள். 



தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிச்செட்டிபட்டி வரையில் ஆயக்கட்டு பகுதிகளில் 14, 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை . இந்த முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் வைகை அணை மூலம் தேக்கப்பட்டு, மதுரை,  ராமநாதபுரம்,  சிவகங்கை,  திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு உதவுகிறது. நெல் விவசாயத்தில் தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக , மற்ற மாவட்டங்களுக்கு உதாரணமாக விளங்கும் தேனி மாவட்டத்தில் நெல் விவசாயத்தில் ஆர்வம் இல்லை என விவசாயிகள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



போதிய நீர் வரத்து இருந்தாலும், விளைச்சலுக்கு பிறகு நெல் விவசாயத்தில் உரிய மகசூல் கிடைப்பதில்லை என்றும், விதை நெல் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது என்றும், தேர்ந்தெடுத்த விதை ரகங்கள் சரியான நாட்களில் முளைப்பதில்லை என்றும், சிரமப்பட்டு விவசாயம் செய்த பின்னும் உரிய விலை போகவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.  திராட்சை,தக்காளி, வாழை, வெங்காயம் போன்ற குறுகிய கால பயிர்கள் விவசாயம் செய்யும் போது அதற்கான பலன் உரிய காலத்திலே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம் வாடிப்பட்டி வெள்ளையத்தேவன்பட்டி,  மூணான்பட்டி, தர்மத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, புலிமான்கோம்பை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. வைகை ஆற்றில் செல்லும் நீரால் கரையோர விவசாய நிலங்களில் ஆண்டு முழுவதும் நீர் சுரப்பு ஏற்படும் இதனால் இப்பகுதிகளில் வாழை காய்கறிகள் சாகுபடி அதிகம் நடைபெறும். பருவகால   மழைக்கால பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் கடந்த காலத்தில் நெல் சாகுபடி செய்தனர்.  தற்போது வைகை அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். அணையில் தற்போது 55.97அடி நீர் உள்ளதால், விநாடிக்கு 719 கன அடி உபரிநீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் செல்லும் நீரால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.  போதுமான நீர் இருப்பு இருந்தாலும் ஆண்டிப்பட்டி விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.



இதுகுறித்து  ஆண்டிபட்டி விவசாயிகள் கூறுகையில், "நெல் சாகுபடியில் செலவு அதிகரிப்பதுடன் அறுவடைக்குப்பின் நிறைவான லாபம் கிடைப்பதில்லை. திராட்சை , வாழை, தக்காளி,  வெண்டை, வெங்காயம், கத்தரி சாகுபடியில் குறுகிய காலத்தில்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறது. வியாபாரிகள் எடுத்துச் சென்ற நெல் பயிர்களுக்கு உரிய காலத்தில் தொகை கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இந்த நெல் விவசாயத்தில் உள்ளது. இதனால் நெல் சாகுபடியை கைவிடுவதற்கான காரணமாக இருப்பதாக ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X